Priyanka Chopra Jonas | இந்த நேரத்துல பூஜை பண்ணு.. கணவர் சொன்ன அறிவுரையை பகிர்ந்த ப்ரியங்கா சோப்ரா..!
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ் தங்கள் திருமண வாழ்க்கைக்குள் இருவரின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் கொண்டு வருவதில் உதவியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ் தங்கள் திருமண வாழ்க்கைக்குள் இருவரின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் கொண்டு வருவதில் உதவியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பு, பூஜை நடத்துமாறு நிக் ஜோனஸ் தன்னிடம் கூறியுள்ளதாக ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனத்தின் வி.எஸ்.வாய்சஸ் என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நேர்காணல் அளித்துள்ள ப்ரியங்கா சோப்ரா, தானும் தனது கணவர் நிக் ஜோனஸும் வெவ்வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்கள் என்ற போதும், ஆன்மிக சிந்தனையில் ஒரே மாதிரியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். `எங்கள் மத நம்பிக்கைகள் மீதான எங்கள் உணர்வுகளையும், உறவுகளையும் குறித்துப் பேசும் போது, ஆன்மிக ரீதியாக நானும் நிக்கும் ஒரே தரப்பில் இருக்கிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு மத நம்பிக்கைகளுடன் வளர்க்கப்பட்டவர்கள். மதம் என்பது கடவுள் என்ற குறிக்கோளை அடைய உதவும் பாதை என்று நான் நம்புகிறேன். அதனால், நாம் எந்த மதத்தவராக வளர்க்கப்பட்டிருந்தால், உயர்ந்த ஆற்றலை நோக்கிய பயணத்தில் நாம் அனைவரும் ஒரே திசையை நோக்கிச் செல்கிறோம். இதில் நானும், நிக்கும் ஒத்துப் போகிறோம்’ என்று ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
`வழிபாட்டு நிகழ்வுகளாக எங்கள் வீட்டில் நான் பல பூஜைகளை மேற்கொள்வதுண்டு. நாங்கள் புதிதாக எதையாவது செய்வதற்கு முன்பு, நிக் என்னை பூஜை செய்யக் கூறி வலியுறுத்துவார். எனது வாழ்க்கையில் புதிதாகத் தொடங்கும் நிகழ்வுகளுக்கு நன்றியாக, பூஜை செய்வது எனது வழக்கம். நான் அவ்வாறு வளர்க்கப்பட்டவள். நிக் அதனைப் புரிந்துகொண்டதோடு, எங்கள் குடும்பத்திலும் அதனை வழக்கமாக மாற்றியிருக்கிறார்’ என்றும் ப்ரியங்கா சோப்ரா தனது திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, நிக் ஜோனஸ் - ப்ரியங்கா சோப்ரா தம்பதியினர் ஆடம்பரமான திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரு குடும்பத்தினரின் மத நம்பிக்கைகளையும், கலாச்சாரங்களையும் கௌரவிக்கும் விதமாகத் தங்கள் திருமணத்தைக் கிறித்துவ, இந்து மதப் பழக்க வழக்கங்களின்படி நடத்தினர்.
இதே நேர்காணலில், ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய 30 வயதை எட்டிய போது, உடல் எடை கூடியதைக் கண்டு எழுந்த விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார். அந்தக் காலகட்டம் மிகவும் இருண்டதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ப்ரியங்கா சோப்ரா ஸ்பெயினில் `சிட்டாடெல்’ என்ற வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். பர்ஹான் அக்தரின் அடுத்த படைப்பான `ஜீ லீ ஸாரா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதில் அவர் கத்ரினா கைஃப், அலியா பட் ஆகியோருடன் முதல் முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.