சீரியஸ் சப்ஜெக்ட்டில் பிரேம்ஜி...வல்லமை திரைப்படம் விமர்சனம் இதோ
Vallamai Movie Review : கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடித்துள்ள வல்லமை படத்தின் முழு விமர்சனத்தை இங்கே காணலாம்

பிரேம்ஜி நடித்துள்ள வல்லமை
கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடித்துள்ள படம் வல்லமை. திவ்யதர்ஷினி , தீபா சங்கர் , சி.ஆர் ரஞ்சித் , சுப்ரமணியன் மாதவன் , திலீபன் , சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பேட்லர்ஸ் சினிமா இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிகேவி இசையமைத்துள்ளார். நேற்று ஏப்ரல் 25 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. வல்லமை படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
வல்லமை திரைப்பட விமர்சனம்
மனைவியை இழந்த பிரேம்ஜி தனது மகளுடன் சென்னைக்கு வேலை தேடி வருகிறார். மகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு தனக்கு ஒரு போஸ்டர் ஒட்டும் வேலையைத் தேடிக் கொள்கிறார். அப்பா மகள் உறவு அவர்களின் எளிமையான வாழ்க்கை என சென்றுகொண்டிருக்க பள்ளியில் பிரேம்ஜியின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதை செய்தது யார். அதை கண்டுபிடித்து ஒரு தந்தையாக பிரேம்ஜி எடுக்கும் முடிவு என்பது வல்லமை படத்தின் மையக்கதை.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையமாக சமீபத்திய ஆண்டுகளில் சில படங்கள் வந்துள்ளன. இதில் எஸ்.யு அருண்குமார் இயக்கிய சித்தா படம் மிக முதிர்ச்சியான ஒரு படைப்பு என்று சொல்லலாம். அதே போல் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் இதே கதையை மாறுபட்ட திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொன்னது. இந்த மாதிரியான சென்சிட்டிவான கதைகளை முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியாகவோ அல்லது கலைப்படைப்பாகவோ கையாள்வது என்பது மிகுந்த சவாலான ஒரு களம்.
அதை சாத்தியப்படுத்துவதில் வல்லமை பட இயக்குநர் முழு வெற்றிபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரேம்ஜியை இதுவரை நகைச்சுவயான கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய நமக்கு சட்டென்று இவ்வளவு சீரியஸான கதையில் பார்ப்பது என்பது கொஞ்சம் சவாலானதுதான். ஆனால் தன்னால் முடிந்த அளவு கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரேம்ஜி. மகளாக நடித்துள்ள திவ்யதர்ஷினியும் நம்மை கவர்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் பேசும் வசனங்கள் கவனத்தை ஈர்த்தாலும் படம் ஒரு முழுமையான அனுபவமாக மாற தவறிவிடுகிறது.





















