ஒரு பொய் நியூஸ்! ரஜினி சான்ஸும் போய்ட்டு! 1000 கோடி வசூலும்.. - புலம்பும் பிரேமம் இயக்குநர்
ஒரு வதந்தியால் ரஜினி பட வாய்ப்பும் போய், 1000 கோடி வசூலும் போய்விட்டதாக பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரம் வருத்தம் தெரிவித்துள்ளார்
2015-ஆம் ஆண்டு, மலையாள மொழிப்படம் பிரேமம்’ வெளியானது. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்பு, நேரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் எந்த திரைப்பட அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவை பதிவிட்டுள்ள அல்போன்ஸ், 2015ம் ஆண்டு பிரேமம் ரிலீஸுக்கு பின்னர் ஒரு இயக்குநராக நான் ரஜினி சாரை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன்.99% இயக்குநர்களுக்கு அந்த ஆசை இருக்கும். ஒருநாள் ஒரு ஆன்லைன் இணையப்பக்கத்தில் செய்தி ஒன்று வந்தது. இயக்குநர் அல்போன்ஸுக்கு ரஜினியை இயக்க விருப்பம் இல்லை என செய்தி. அந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த செய்தி குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் செய்தார். அப்படியான எந்த தகவலையும், எந்த நேர்காணலையும் நான் கொடுக்கவில்லை என்று நான் சொன்னேன். இது குறித்து புரிந்துகொண்ட அவர் ரஜினி சாரிடமும் தெரிவித்துள்ளார்.
அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இப்போது கதை டிஸ்கசனில் ஒன்றில் நடிகர் ஒருவர் அந்தக்கதையை கேட்கிறார். ரஜினி சாரை இயக்கவில்லை என்பதை குறிப்பிடுகிறார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. 2015 முதல் இந்த நொடி வரை அந்த பொய்ச்செய்தி என்னை தொல்லை கொடுக்கிறது. அந்த ரஜினி படம் மட்டும் உருவாகி இருந்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூல் செய்திருக்கும். அரசாங்கத்துக்கும் வரி மூலம் லாபம் கிடைத்திருக்கும். இது எனக்கும், அரசாங்கத்துக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், ரசிகர்களுக்கும் ஒரு இழப்பு தான் எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில்தான் ‘பாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக தெரிவித்திருந்தார். பகத்ஃபாசில் இதில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், ஃபேஸ்புக் கமெண்டில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்துள்ளார். ரஜினியை வைத்து இயக்குவதற்காக கதை வைத்துள்ளீர்களே என அந்த ரசிகள் எழுப்பிய கேள்விக்கு, “பிரேமம் படத்திற்கு பிறகு ரஜினி சாரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், சந்திக்க முடியவில்லை. ஆம், ரஜினி சாருக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன். என்னுடைய வேலையை நான் சரியாக செய்தால், கடவுள் மீதி வேலையை செய்துவிடுவார். இன்னொரு நாள், நிச்சயமாக ரஜினி சாரை சந்திக்க செல்வேன். இப்போது கடவுளும் கொரோனாவை அழிப்பதில் பிஸியாக இருப்பார்” என்று பதிவிட்டிருந்தார்.