பிரச்சனை என்றால் இளையராஜா வீட்டுக்கு போவேன்...இளையாஜா மனைவி ஜீவா பற்றிய நினைவுகளை பகிர்ந்த பிரேமலதா விஜயகாந்த்
கொம்புசீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மனைவி ஜீவாவுடனான நினைவுகளை பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்துகொண்டார்.

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கொம்புசீவி ஆடியோ லாஞ்ச்
கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளையராஜா மனைவி ஜீவா பற்றி பிரேமலதா
திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இங்கு இருக்கும் அனைவரும் கேப்டனை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் தான், அறிமுகமானவர்கள் தான்.யுவன் ஷங்கர் ராஜா பிறந்ததில் இருந்தே எனக்கு தெரியும். இளையராஜா சார், ஜீவா ஆன்ட்டி எங்களுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். திரையுலகத்தில் எனக்கு சிலர்தான் நண்பர்கள். அதில் மிகவும் முக்கியமானவர் ஜீவா ஆன்ட்டி தான். அவர்கள் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லலாம்.
அப்போதெல்லாம் எல்லா படங்களும் வெளியாகும். ஹீரோக்களை விட நாங்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம். இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லா படத்திற்கும் பிரிவியூ காட்சி பார்க்க ஜீவா என்னை அழைப்பார்கள். கேப்டன் படம் என்றால் நான் என்னுடைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் அழைப்பேன்.
பிரபாகரன், சண்முகம் போல் யுவனும் எனக்கு ஒரு பிள்ளை தான். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் இளையராஜா குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவேன். அதேபோல் சரத்குமாருடனும் பேசுவேன்.
எங்களுடைய திருமணம் நடந்தது ஜனவரி 31 1990. அன்றுதான் 'புலன் விசாரணை' திரைப்படமும் வெளியானது. அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான பிணைப்பு, நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்கிறது. நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய போது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள். இப்படி பழைய நினைவுகளை நினைக்கும் போது ஒவ்வொன்றும் அற்புதமான தருணங்களாகத்தான் இருக்கிறது.
சண்முக பாண்டியன் நடித்த 'சகாப்தம்' படத்திற்கு தயாரிப்பாளர் எல் கே சுதீஷ். அவருடைய தாய் மாமாவாக மட்டும் இல்லாமல் அவருடைய அனைத்துமாக இன்று வரை அவர் இருக்கிறார்.
இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக இருக்கும். இதனை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள். இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், ராஜா சாரும், யுவனும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அம்மா பற்றிய சென்டிமென்ட் பாடல் என்றால் அது ராஜா சார் பாடினால்தான் சிறப்பு.
படத்தில் சண்முகமும் , சண்முகத்தின் தாய் மாமாவாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். டிசம்பர் 19ம் தேதியன்று கொம்பு சீவி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.





















