கர்ப்பிணி எனப் பார்க்காமல் சனா கானை தரதரவென இழுத்தாரா கணவர்? சர்ச்சைக்குள்ளான வீடியோ..
ரமலான் நோன்பு திறக்க மசூதி ஒன்றுக்கு வருகை தந்த சனா கானை அவரது கணவர் தரதரவென்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி வைரலானது.
நடிகர் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தின் மூலம் தடாலடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சனா கான். ஈ, தம்பிக்கு எந்த ஊரு, பயணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சனா கான் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6ஆவது சீசனில் கலந்துகொண்டு இரண்டாவது ரன்னர் அப்பாக உருவெடுத்த சனா கான், அதன் பின் பல பிக் பாஸ் சீசன்களிலும் பங்கேற்றுள்ளார்.
சினிமாவைத் துறந்த சனா கான்
இந்நிலையில், இஸ்லாமிய பெண்ணான சனா கான் முன்னதாக சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இஸ்லாமில் ஈடுபாடு கொண்டு ஹிஜாப் அணிந்து வலம் வரத் தொடங்கினார். மேலும் முஃப்தி அன்ஸ் சயத் என்பவரை 2020இல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கருவுற்றிருப்பதை சனா கான் அறிவித்திருந்தார். மேலும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து தன் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
இதனிடையே ரமலான் நோன்பு திறக்க முன்னதாக மசூதி ஒன்றுக்கு வருகை தந்த சனா கானை அவரது கணவர் தரதரவென்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி வைரலானது.
தரதரவென்று இழுத்துச்சென்ற கணவர்
கருவுற்ற வயிற்றுடன், மூச்சுவாங்க சனா கான் நடந்து செல்வதுபோல் இந்த வீடியோ இருந்த நிலையில், “கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா இழுத்துச் செல்வது” என்றும், ”மூச்சுவிடக்கூட சனாவால் முடியவில்லை” என்றும் ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சர்ச்சைகளுக்கு நடுவே இதுகுறித்து தன் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து சனா கான் பகிர்ந்துள்ளார்.
விளக்கமளித்த சனா கான்
“இந்த வீடியோ இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. எனது அன்பான சகோதர சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் இது விசித்திரமாகத் தெரிவது எனக்குப் புரிகிறது. நாங்கள் வெளியே வந்தவுடன் டிரைவருடனும் காருடனும் தொடர்பை இழந்தோம். நான் வழக்கத்தை விட நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன். வியர்த்து, அசௌகரியமாக இருந்தது. அதனால் தண்ணீர் குடிக்கவும் காற்று வாங்கவும் உடனடியாக அவர் என்னை காருக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.
எல்லா விருந்தினர்களின் படங்களையும் கிளிக் செய்து கொண்டிருந்த புகைப்பட செய்தியாளர்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. விரைவாக செல்லலாம் என்று நான்தான் அவரிடம் கூறினேன். வேறு எதுவுமில்லை. உங்கள் அக்கறைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.