Dude: தமிழ் சினிமாவின் ரியல் டூட் யார் தெரியுமா? சரிந்த சாம்ராஜ்யம்! இப்படி ஒரு சோகமா?
டூட் படத்தில் இடம்பெற்றிருப்பது போலே தமிழ் சினிமாவின் ஜாம்பவனான சந்திரபாபு-வின் சோகமான சம்பவம் அரங்கேறி அவரது வாழ்க்கையே புரட்டிப்போட்டுவிட்டது.

தமிழ் சினிமாவில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள படம் டூட். பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வந்தாலும், விமர்சன ரீதியாக இந்த படம் பல விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. ஏனென்றால், தான் காதலித்த பெண் வேறு ஒருவனை விரும்புவதை அறிந்த கதாநாயகன் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியையே அவர் காதலனுடன் சேர்த்து வைப்பதே படத்தின் கதையாகும்.
தமிழ் சினிமாவின் ரியல் டூட்:
திரைப்படமாக இதைப் பார்க்கும்போது விமர்சனத்திற்குரியதாக நமக்குத் தெரிந்தாலும், ஒருவரின் நிஜ வாழ்வில் அது நடந்தால் அது மிகவும் வேதனைக்குரியது ஆகும். அதுவும் தனது மனைவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று அறிந்தாலே, அவர் வேறு ஒருவருடன் வாழ ஆசைப்படுகிறார் என்று அறிந்தாலே அதை அறியும் ஆணின் வலி வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்றாகும். அதுபோன்ற ஒரு வேதனைக்குரிய சம்பவம் தமிழ் திரையுலகின் பிரபல ஜாம்பவானின் சொந்த வாழ்க்கையில் நடந்தது உங்களுக்குத் தெரியுமா? தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் சந்திரபாபு.
ஷீலாவை திருமணம் செய்த சந்திரபாபு:
எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக உலா வந்த சந்திரபாபு வாழ்வில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. ஆம். 1947ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான சந்திரபாபு-வின் தனித்துவமான நடிப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு, சிந்தனை ஆகியவற்றால் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தது.

சந்திரபாபுவின் சிந்தனையும், செயல்பாடும் ஆங்கிலேயர்களைப் போலவே இருக்கும். முன்னணி நடிகராக அவர் உலா வந்த நேரத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணான ஷீலா என்பவரை 1958ம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார். அப்போதைய முதலமைச்சர் காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர். இவரது தந்தை சுவாமிகண்ணு வின்சென்ட் அப்போது மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்.
காதலனுடன் வாழ ஆசைப்பட்ட சந்திரபாபு மனைவி:
சந்திரபாபு திருமணம் செய்து கொண்ட ஷீலா வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்த சந்திரபாபு, முதலிரவு அன்று அவர் விரும்பியவருடன் வாழ அனுப்பிவிட்டதாக ஒரு தகவல்கள் உள்ளது. அதேசமயம், சிலர் சந்திரபாபு தனது மனைவி ஷீலாவுடன் பெங்களூருக்கு தேனிலவுக்குச் சென்றதாகவும், இருவரும் இணைந்து 6 மாத காலம் சேர்ந்து வாழ்ந்ததாகவும் பின்னர் தனது முன்னாள் காதலன் நினைவிலே ஷீலா இருந்து வந்ததை அறிந்த சந்திரபாபு அவரை அவரது காதலனுடன் சேர்ந்து வாழுமாறு கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சிலர் சந்திரபாபுவுடனான திருமணத்திற்குப் பிறகு வேறொரு நபர் மீது ஷீலாவிற்கு காதல் பிறந்ததாகவும், அதை அறிந்த சந்திரபாபு ஷீலாவை அவர் விரும்பும் காதலனுடன் சேர்ந்து வாழுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மேலே கூறிய நிகழ்வுகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் சந்திரபாபு தனது மனைவி ஷீலா வேறு ஒருவரை விரும்புவதை அறிந்தவுடன் அவர் மனதிற்கு பிடித்தவருடன் வாழ அவரை அனுமதித்துவிட்டார் என்பது மட்டுமே உண்மை.
சரிந்து போன சந்திரபாபு வாழ்க்கை:
பின்னர், அதிகாரப்பூர்வமாக இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு ஷீலா லண்டன் சென்றுவிட்டார். அங்கே ஒரு மருத்துவரை ஷீலா திருமணம் செய்து கொண்டார். அந்த மருத்துவர்தான் ஷீலாவின் காதலன் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சந்திரபாபுவை மிக கடுமையாக பாதித்தது. திரைவாழ்வின் உச்சத்தில் இருந்த சந்திரபாபு இந்த சம்பவத்திற்கு பிறகு சரியத் தொடங்கினார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துக் கொடுத்தார். 1960-களில் இருந்து படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்து மீள முடியாத சந்திரபாபு மது போதைக்கு அடிமையானார்.
மாதுவை மறக்க மது:
1960ம் ஆண்டில் திரைப்படத்துறையில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு டெல்லியில் தங்கினார். நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் கூட அவர் டெல்லி சென்றதை கூறவில்லை. டெல்லியில் பெரும்பாலான பொழுதை குடித்தே கழித்தார்.

மதுபோதை காரணமாக உடல்நலக்குறைவும் உண்டாகியது. ஆனாலும், மீண்டும் நடிக்கத் திரும்பினார். எம்ஜிஆர் உச்சத்தில் இருந்த தருணத்தில் சந்திரபாபுவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. எம்ஜிஆரை வைத்து பட வேலைகளைத் தொடங்கிய நிலையில், அந்த படம் கைவிடப்பட்டது. மறுபுறம் நாகேஷின் வளர்ச்சி சந்திரபாபுவிற்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
பன்முக கலைஞர்:
மதுபோதை, பட வாய்ப்புகள் குறைவு, உடல்நலக்குறைவு போன்றவற்றால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார் சந்திரபாபு. கடைசியாக சிவாஜிகணேசனின் மிகப்பெரிய வெற்றிப்படமான பாரதவிலாஸ் படத்தில் நடித்தார். நடிகராக மட்டுமின்றி வெற்றிகரமான பாடகராகவும் உலா வந்தார். சந்திரபாபு பாடிய புத்தியுள்ள மனிதர் எல்லாம், பொறந்தாலும் ஆம்பளயா பொறக்க கூடாது, கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே, உன் திருமுகத்தை ஒரு முகமா, பம்பர கண்ணாலே காதல் சங்கதி போன்ற பல பாடல்கள் இன்றும் பிரபலம் ஆகும்.
46 வயதிலே மரணம்:
ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகரான சிந்தனை கொண்ட சந்திரபாபு தனது திருமண வாழ்க்கையில் அடைந்த தோல்வியால் மதுவைத் தேடி 1974ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தனது 46 வயதிலே காலமானார். கடைசி காலத்தில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த சந்திரபாபுவிற்கு அப்போதைய முன்னணி இயக்குனர் ஏபி நாகராஜன் உதவி செய்தார்.

மேலும், சந்திரபாபுவின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை நடிகர் திலகம் சிவாஜியே மேற்கொண்டார். சந்திரபாபு மட்டும் இன்றைய தலைமுறை கலைஞராக இருந்திருந்தால் தமிழ் சினிமாவை அடுத்தகட்டம் நோக்கி இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.






















