Adipurush: ஆதிபுருஷ் திரையிட 40 நிமிட தாமதம்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய பிரபாஸ் ரசிகர்கள்..!
தெலங்கானாவில் ஆதிபுருஷ் படம் திரையிடப்படுவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
பாகுபலி நடித்து புகழ்பெற்றதன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக உருவெடுத்தார் பிரபாஸ். இவர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ள இந்த படம் சாதாரண படமாக அல்லாமல் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
அடித்து நொறுக்கப்பட்ட தியேட்டர்:
படத்தின் டீசரும், ட்ரெயிலரும் ரசிகர்களை பெரிதளவில் உற்சாகப்படுத்தாவிட்டாலும், பிரபாஸ் நாயகனாக நடித்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை. தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது சங்காரெட்டி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜோதி சினிமா என்ற திரையரங்கம். இந்த திரையரங்கத்தில் ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த தியேட்டரில் உள்ள ஒலி அமைப்பு சரிவர வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கு திரையரங்க ஊழியர்களுக்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால், ஆதிபுருஷ் படத்தை பார்ப்பதற்காக காத்திருந்த பிரபாஸ் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். ஆத்திரமடைந்த ரசிகர்களில் சிலர் கூச்சலிட்டதுடன், திரையரங்கத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
போலீஸ் விசாரணை:
இதையடுத்து, திரையரங்கத்தின் சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, ஆந்திராவில் யூ டியூப் சேனலுக்கு ஆதிபுருஷ் படம் நன்றாக இல்லை என்று கூறிய ரசிகர் ஒருவரை பிரபாஸ் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகியது.
ஆதிபுருஷ் படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், திரையரங்கிற்கு செல்லும் பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படம் நன்றாக இல்லை என்று கூறினால் தாக்குவதும், ஆதிபுருஷ் படம் திரையிட தாமதமானால் திரையரங்கை தாக்குவதும் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் மற்ற ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்மறை விமர்சனம்:
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தை இந்திப்பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ளார். படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் சயீப் அலிகான் நடித்துள்ளார். இந்தி நடிகை கிர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ராமர் வேடமேற்றுள்ள பிரபாஸ் நாயகியை சயீப் அலிகானிடம் இருந்து மீட்பது எப்படி? என்பதே கதையாகும்.
தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் பாகுபலிக்கு பிறகு வெளியான சாஹூ மற்றும் ராதே ஷ்யாம் படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது வெளியான ஆதிபுருஷ் படமும் எதிர்வினையான விமர்சனங்களையே பெற்று வருவது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: HBD Arvind Sami : சாக்லேட் பாய் டூ ஸ்மார்ட் வில்லன்... ஆணழகன் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் இன்று!
மேலும் படிக்க: Father Daughter Movies: அப்பாவின் குட்டி தேவதை நீயே! அப்பா - மகள் உன்னதமான உறவை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள் சில...