Father Daughter Movies: அப்பாவின் குட்டி தேவதை நீயே! அப்பா - மகள் உன்னதமான உறவை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள் சில...
Father Daughter Sentiment Movies in Tamil: தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில அப்ப்பா - மகள் சென்டிமென்ட் திரைப்படங்கள்
இந்த உலகில் மகளை பெற்ற அனைத்து தகப்பன்களுக்கும் அவள் தான் தேவதை. அப்பா - மகள் உறவு என்பது அத்தனை உன்னதமானது. இப்படி பட்ட அற்புதமான உறவு தமிழ் சினிமாவில் மிக அழகா வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. அந்த வகையில் அப்பா - மகள் பாசத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில படங்களை பற்றி காணலாம் :
அவ்வை சண்முகி :
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், டெல்லி கணேஷ், ஹீரா என மிக பெரிய திரை பட்டாளம் நடித்த சூப்பர் ஹிட் படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் பல்வேறு ஸ்வாரஸ்யமான அம்சங்கள் இருந்தாலும் அப்பா - மகள் சென்டிமென்ட் மிகவும் அழகாக ஆழமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். கணவனை விட்டு பிறந்த மனைவியால் தந்தையின் பாசத்திற்காக எங்கும் மகளுக்காக பெண் வேடமிட்டு கமல்ஹாசன் குழந்தையை பார்க்க செல்வது தான் படத்தின் மையக் கதை. அப்பாவின் வாசனை எனக்கு தெரியாதா என பிஞ்சு குழந்தை சொல்வதிலேயே அந்த பிணைப்பு வெளிப்படும். கிரேஸி மோகன் வசனங்கள் படத்திற்கு உயிர் நாடியாக இருந்தது.
கன்னத்தில் முத்தமிட்டால் :
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் குழந்தை நட்சத்திரமாக பார்த்திபன் மகள் கீர்த்தனா நடித்த இப்படம் ஒரு மாஸ்டர் பீஸ் படம். இலங்கை அகதியின் மகளை தத்தெடுத்து தனது மகளை போல பாசத்தை கொட்டி வளர்க்கும் ஒரு பெற்றோரின் கதை. எழுத்தாளர் சுஜாதாவின் 'அவளும் நானும்' சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மிகவும் எமோஷனலான ஒரு படம்.
அபியும் நானும் :
ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, திரிஷா நடித்த படம் அபியும் நானும். தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பந்தத்தையும், பாசத்தையும் அழகாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திய படம். இப்படத்தில் இடம்பெற்ற ‘வா வா என் தேவதை யே’ பாடல் தான் பல அப்பாக்களின் ரிங் டோனாக இருந்தது.
தெய்வ திருமகள் :
ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலா பால், அனுஷ்கா, பேபி சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'தெய்வ திருமகள்'. மனவளர்ச்சி குன்றிய ஒரு தந்தைக்கும் 7 வயது மகளுக்கும் இடையில் நடக்கும் பாசப்போராட்டம். எந்தவிதமான வியக்கும் திருப்பங்களும் இல்லாமல், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் நிரம்பிய இப்படம் அப்பா மகளின் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும். கிளைமாக்ஸ் காட்சியில் வார்த்தைகளை விட அன்பு சத்தமாக பேசும் என்பதை நீதிமன்ற காட்சி பார்வையாளர்களையும் ஊடுருவி பாதித்தது.
தங்க மீன்கள் :
ராம் இயக்கி நடித்த அப்பா - மகளின் கதை 'தங்க மீன்கள்'. மீன் குஞ்சுகளுக்கு மத்தியில் தங்க மீனாக தனது மகளை வளர்க்க வேண்டும் என ஆசைப்படும் நிலையான வருமானம் இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையின் கதை. நா. முத்துக்குமார் வரிகளில் 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்...' பாடலின் உயிர் உருகியது.
கனா :
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'கனா'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான படம் என்றாலும் அதில் தந்தையின் கிரிக்கெட் மோகமும், தந்தைக்காக மகள் பெருமை சேர்ப்பதும் வெகுமானம். மறுபக்கம் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக துடிக்கும் பாசக்கார அப்பாவாக வாழ்ந்த சத்யராஜ்.
இப்படி ஏராளமான அப்பா - மகள் பாசப்பிணைப்பை காட்சிப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன. உலகில் உள்ள அனைத்தும் தந்தைகளுக்கு மகள்களின் சார்பாக இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!