PopCorn: தியேட்டரில் டிஜிட்டலில் வித்தை காட்டும் இந்தியர்கள்.. டன் கணக்கில் காலியாகும் பாப்கார்ன், சமோசா
நடப்பாண்டில் திரையரங்குகளுக்கு சென்ற இந்தியர்கள், 8.60 லட்சம் கிலோ பாப்கார்னை உண்டு மகிழ்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐநாக்ஸ் நிறுவனம் ஆய்வு:
இந்தியாவில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் அங்கு விரும்பி உண்ணும் உணவுகள் தொடர்பாக, Inox Leisure Ltd எனும் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியாவின் 74 நகரங்களில் அமைந்துள்ள 167 ஐநாக்ஸ் திரையரங்குகளில் நடப்பாண்டில் வந்த, 7 கோடி சினிமா ரசிகர்களின் உணவுத் தேர்வுகள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பாப்கார்ன், சமோசாவிற்கு அமோக ஆதரவு:
ஆய்வின் முடிவில், நடப்பாண்டில் மட்டும் இந்தியர்கள் 8 லட்சத்து 63 ஆயிரம் கிலோ பாப்கார்னை விரும்பி உண்டுள்ளனர். அந்த வகையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் நடப்பாண்டில் விற்பனையான பாப்கார்ன் டப்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால், அந்த அடுக்கு 1032 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்ந்து துல்லியமாக விண்வெளியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்கார்னை தொடர்ந்து சமோசாவை தான் இந்தியர்கள் அதிகளவில் திரையரங்குகளில் விரும்பி உண்டுள்ளனர். அதன்படி, 197 கிலோமீட்டர் தூரத்தை கடக்கக்கூடிய அளவிற்கு, 19.38 லட்சம் சமோசாக்களை இந்தியர்கள் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வாங்கி சுவைத்துள்ளனர்.
கோக்கில் கொல்கத்தாவிற்கு முதலிடம்:
ஐநாகஸ் திரையரங்குகளுக்கு நடப்பாண்டில் வந்த ரசிகர்கள் 38.15 லட்சம் லிட்டர் கோக்கை பருகியுள்ளனர். சுவாரஸ்யமாக, 3 லட்சத்து 43 ஆயிரத்து 740 லிட்டர் கோக் விற்பனையுடன், கொல்கத்தா நகரம் மற்ற எந்த மெட்ரோ நகரத்தையும் விட அதிகமான கோக்கைப் பயன்படுத்தி பட்டியலில் முன்னணியில் உள்ளது. நடப்பாண்டில் ஐநாக்ஸ் திரையரங்குகளுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர், பர்கர்கள் மற்றும் பீட்சாக்களை விட சாண்ட்விச்களை அதிகளவில் விரும்பியுள்ளனர். 2022ல் மட்டும் 5.1 லட்சம் சாண்ட்விச்கள் ஐநாக்ஸ் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மும்பை, லக்னோ, குர்கான் மற்றும் கொல்கத்தா போன்ற சந்தைகளை விட, வைசாக்கில் அதிகப்படியான பர்கர்கள் விற்பனையாகியுள்ளன.
டோனட்களை விரும்பும் சென்னை வாசிகள்:
ஐஸ்கிரீம்கள் மற்றும் பிரவுனிகள் மிகவும் விருப்பமான இனிப்புகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், டோனட்ஸ் மிகவும் விரும்பப்படும் இனிப்பு வகையாக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐநாக்ஸ் திரையரங்குகளில் விற்பனையான டோனட்சில், மூன்றில் இரண்டு பங்கு சென்னையில் விற்பனையாகியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு:
கொல்கத்தாவில் உள்ள திரையரங்குகளில் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பெங்களூரு மற்றும் சென்னை பகுதிகளில் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அதிகபட்ச உணவு ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று மும்பை திரையரங்குகளில், இரவு 10 மணி முதல் 11 மணி வரை அதிகபட்ச உணவு ஆர்டர்கள் நடைபெறுகின்றன. ஐநாக்ஸ் திரையரங்குகள் நிமிடத்திற்கு 29 டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது. இது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவத்தனை எந்த அளவிற்கு விரிவடைந்துள்ளது என்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது.