விஜய் படத்தை பாக்காமலே விஜய்யை வைத்து எடுத்த படம்! கோலிவுட்டை புரட்டி போட்ட கதை தெரியுமா?
பூவே உனக்காக திரைப்படத்திற்கு முன்பு விஜய் நடித்த எந்த படத்தையும் தான் பார்த்தது இல்லை என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உலகில் நட்சத்திரமாக உலா வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு என்ற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய்யின் திரை வாழ்வில் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் பூவே உனக்காக. இந்த படத்திற்கு பிறகே விஜய்க்கு என்று ரசிகர்கள் கூட்டம், குடும்ப ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர்.
விஜய் வந்தது எப்படி?
இந்த நிலையில், இந்த படத்திற்கு நடிகர் விஜய்யை இயக்குனர் விக்ரமன் எப்படி தேர்வு செய்தார்? என்பதை கீழே விரிவாக காணலாம். இதுதொடர்பாக, இயக்குனர் விக்ரமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பூவே உனக்காக கதை எழுதி முடித்த பிறகு, அந்த கதைக்கு உள்ளேதான் விஜய் வந்தார். விஜய்யை அதற்கு முன்பு ஒரு முறைதான் பார்த்திருந்தேன். இயக்குனர் ஷங்கர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் வந்திருந்தார். பார்த்திருந்தேன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் என்பது மட்டும் தெரியும்.
விஜய் படமே பாத்தது இல்லை:
ஆனால், அப்போது அவர் நடித்த எந்த படத்தையும் நான் பார்த்தது இல்லை. அப்போது, அவர் 4 படங்கள் நடித்திருந்தார். நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, ரசிகன், தேவா 4 படம்தான் நடித்திருந்தார். அதன்பின்பு. ஒருநாள் ஜெயா டிவியில் தேவா பட பாடல் போட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்னு வரும்.
விஜய்யே பாடி டான்ஸ் ஆடியிருந்ததால் ரோம்ப பிடிச்சு இருந்தது. அவரோட எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ், குரல் ரொம்ப பிடிச்சு இருந்தது. இதனால், இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமா இருப்பார் என்று தேர்வு செய்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் விக்ரமன் விஜய் பூவே உனக்காக படத்திற்கு முன்பு 4 படங்கள் நடித்திருந்ததாக கூறியிருந்தார். ஆனால், பூவே உனக்காக படத்திற்கு முன்பாக விஜய்க்கு அந்த 4 படங்கள் மட்டுமின்றி ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளி ஆகிய படங்களும் ரிலீசாகி இருந்தது.
மாபெரும் ப்ளாக்பஸ்டர்:
1996ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் அந்தாண்டு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. திரையரங்குகளின் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட திரைப்படமாக இந்த படம் அமைந்தது. விஜய்யுடன் இந்த படத்தில் சங்கீதா, அஞ்சு, சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன், சுகுமாரி, விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர். மீசை முருகேசன், மாதன் பாப், ஷீலா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். சரவணன் ஒளிப்பதிவு செய்ய ஜெய்சங்கர் எடிட்டிங் செய்திருப்பார். இந்த படத்தில் இடம்பிடித்த ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.

