PS 2 : ஐடி ரெய்டுக்கு பொன்னியின் செல்வன் தியேட்டர் போங்க... ’ரூ.1000 கோடி கலெக்ஷன் அள்ளும்’: ஆரூடம் சொன்ன பார்த்திபன்!
”இந்தப் படத்தின் ப்ரொமோஷன்கள பார்க்க கண்கோடி வேணும். எல்லாரும் அந்த பெண்கள் (த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி) வர்றதை பார்த்தா, அந்த பெண்கள் ஜெயம் ரவி, கார்த்திய பார்க்கறாங்க” - பார்த்திபன்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னையில் தொடங்கி, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி, திருச்சி என படக்குழுவினர் தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் இன்று சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் சின்ன பழுவேட்டரையராக நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் இதில் கலந்துகொண்டு பேசியதாவது:
“பொன்னியின் செல்வன் 1 பத்திரிகையாள சந்திப்பில் நீங்க பேசியது வைரல் ஆச்சுன்னு மணி சார் உதவியாளர் சொன்னாரு. ஆனால் இந்த நடிகர்கள் செய்த ப்ரொமோஷனை விட வைரல் எதுனு தெரியல.
ஐடி ரெய்டில் 1000 கோடி ரூபாய் பிடிக்க வேண்டுமென்றால் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு செல்லுங்கள். இந்த வாரம் கண்டிப்பா அவ்வளவு கலெக்ஷன் இருக்கும்.
சுபாஸ்கரன் மணிரத்னத்தின் லட்சியப் பயணத்தின் பின் இருந்துள்ளார். மணி சார் போட்ட உழைப்ப விட இந்தப் படத்துக்கு பேசியது அதிகம். அவர் இவ்வளவு பேசி நான் பார்த்ததே கிடையாது. ஆனால் பிரமோஷன்ல பேசுனது ஆச்சரியமாக தான் இருந்துச்சு. சுஹாசினியிடமே அவர் மூன்று வார்த்தை பேச மாட்டார்.
இந்தப் படத்தின் ப்ரொமோஷன்கள பார்க்க கண்கோடி வேணும். நான் அழகிய விமானம் பார்த்து இருக்கேன். ஆனால் அழகிகள் இறங்கும் குட்டி விமானத்தை இங்க தான் பார்த்தேன். புஷ்பங்களை இறக்கும் புஷ்பக விமானம். பெண்களை வர்ணிக்கிற வார்த்தைகளை விட ஆண்களை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கிறது கஷ்டம் தான்.
வெறும் தலை மயிரை வச்சி ஸ்டைல் பன்றாரு விக்ரம் . மயிர் கெட்ட வார்த்தை இல்லை. மயிற்கூச்செரியும் என நாம சொல்லிருப்போம். அந்த மாதிரி குடுமியை வச்சி தங்களால் முடிஞ்ச தங்கலான் மூலம் கொடுத்துட்டு இருக்கீங்க.
ஜெயம் ரவி, கார்த்தி பத்தி சொல்லனும்னா, எல்லாரும் அந்த பெண்கள் (த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி) வர்றதை பார்த்தா, அந்த பெண்கள் இந்த ஆண்களை பார்க்கிறாங்க.. ஸ்டைலிஷான இவர்களது ப்ரொமோஷன் பிரமாதம்” எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகை ஷோபிதா, “சோழா டூர் முடிவுக்கு வருகிறது, இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் அனுபவம். நாங்கள் படம் நடிக்கும்போது கூட எங்களுக்கு இவ்வளவு பேச நேரம் கிடைக்கவில்லை. பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் நான் செலவிட்ட நேரத்தை பல காலத்துக்கு நான் பொக்கிஷமாகக் கருதி கொண்டாடுவேன்.
நாளை படம் வெளியாகிறது. நான் என் சந்தோஷம், பெருமை, நன்றிக்கடன் ஆகியவற்றை உங்களுடன் பகிரவே வந்துள்ளேன். நான் அடுத்த முறை உங்களுடன் தமிழில் பேசுவேன். என் வகுப்புகள் தொடங்கிவிட்டன” எனப் பேசினார்.