Ponniyin Selvan 2: பிப்ரவரி 14 வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல்? அருண்மொழி வர்மன் - வானதி காதல் பாடலா?
ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது.
எழுத்தாளர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ’பொன்னியின் செல்வன்’.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன், தமிழ்,தெலுங்கு,இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
லைகா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்த நிலையில், மணிரத்தினத்தின் நேர்த்தியான திரைக்கதை,பிரம்மாண்ட காட்சிகள் ஆகியவற்றுடன் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்து ஹிட் அடித்தது.
விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன்,ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நடிகர் பட்டாளமே நடித்த இப்படம் 450 கோடிகளுக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து தமிழ் சினிமாவின் பெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.
அதனைத் தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
2023 சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகும் என சென்ற ஆண்டே மணிரத்னம் அறிவித்ததுடன் முழு ஷூட்டிங்கையும் ஏற்கெனவே ஒரேடியாக முடித்து விட்டார்.
இந்நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது.
View this post on Instagram
இச்சூழலில் பட ரிலீசுக்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் விரைவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும், காதல் பாடலான இப்பாடல் அருள்மொழி வர்மன் - வானதி இருவருக்குமான பாடலாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன்னியின் செல்வன் பாகம் 1 ரிலீசுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் படக்குழு முழுவீச்சில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்ட நிலையில், இந்த பாகத்துக்கும் அதேபோல் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபடுவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் ஐமேக்ஸில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியானது.
மற்றொருபுறம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக ரிலீசுக்கு முன் முதலாம் பாகத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யுமாறும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.