The Elephant Whisperers: ஆஸ்கர் விருதுடன் பிரதமர் மோடி..! நேரில் வாழ்த்து பெற்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' இயக்குனர், தயாரிப்பாளர்..!
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்
95வது ஆஸ்கர் விருது விழா சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது . திரைதுறையினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை இந்த ஆண்டு இரண்டு பிரிவுகளின் கீழ் இந்தியா கைப்பற்றி நமது நாட்டிற்கு பெருமை சேர்த்தது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் "ஆர்.ஆர்.ஆர்" படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படமும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து :
அந்த வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இருவரும் பிரதமர் மோடியை ஆஸ்கர் விருதுடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். பிரதமர் மோடி இரண்டு கைகளாலும் இரண்டு ஆஸ்கர் விருதை சுமந்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கம் மூலம் பதிவிட்டுள்ளார். " தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் சினிமாட்டிக் புத்திசாலித்தனமும் வெற்றியும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து அனைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்துள்ளது. இன்று இந்த அருமையான குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் இந்தியாவை பெருமை படுத்தி உள்ளார்கள்" என பதிவிட்டுள்ளார்.
கவனத்தை ஈர்த்த பொம்மன் - பெல்லி தம்பதி:
குனீத் மோங்கா தயாரிப்பில், கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் யானைகளை பிள்ளைகள் போல வளர்த்து வந்த தம்பதியர் பற்றின கதை. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் காப்பகத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி என்ற தம்பதி இரண்டு குட்டி யானைகளை மிகவும் பாசத்துடன் தாய் தந்தையாக இருந்து வளர்த்து வருகிறார்கள்.
அவர்களிடம் அந்த யானை குட்டிகள் எப்படி பழகுகிறது? அவர்கள் எப்படி அவற்றை பராமரிக்கிறார்கள்? என்பது தான் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் கதை. படத்தில் யானைகளையும் தாண்டி பொம்மன், பெள்ளி தம்பதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
முதல் ஆவணப்படம் என்ற பெருமை :
இப்படம் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் விருதை வென்றது. ஒரு ஆவணப்படத்திற்காக இந்தியா ஆஸ்கர் விருது பெற்ற முதல் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த இப்படத்திற்கு உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
முதுமலைக்கு வரும் பிரதமர் :
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் கதாபாத்திரங்களான பொம்மன் - பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வரும் ஏப்ரல் 9ம் தேதி முதுமலை யானைகள் காப்பகத்திற்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.