(Source: ECI/ABP News/ABP Majha)
Pathaan Box Office Collection: ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.634 கோடி... பட்டையைக் கிளப்பும் பதான் வசூல்!
பிரச்சினைகள் ஓய்ந்து ஒரு வழியாக ஜன.25 வெளியான பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம்பேக் படமாக அமைந்து பாலிவுட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது
பாலிவுட்டில் பலகட்ட பிரச்னைகளைத் தாண்டி ஜனவரி 25-ஆம் தேதி வெளியான ஷாருக்கின் பதான் படம் இந்திய சினிமா வரலாற்றில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி சாதனை புரிந்து வருகிறது.
அந்த வகையில் வெளியான ஐந்தே நாள்களில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.634 கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த பாலிவுட் உலகையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பதான். இந்தியாவில் மட்டும் மொத்தம் பதான் படம் ரூ.395 கோடி வசூலித்துள்ள நிலையில், ஷாருக்கான் தான் பாலிவுட்டின் வசூல் மன்னன் என்பதை அழுத்தமாக இப்படத்தின் மூலம் வசூலித்துள்ளார் எனக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
View this post on Instagram
முன்னதாக பதான் வெற்றி குறித்தும் நன்றி தெரிவிக்கும்விதமாகவும் முன்னதாக ஷாருக் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஷாருக், கோவிட் காலத்தின்போது நான் 1/2 ஆண்டுகள் வேலை செய்யவில்லை. ஆனால் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் என்னால் நேரத்தை செலவிட முடிந்தது. என் குழந்தைகள் - ஆர்யன் மற்றும் சுஹானா - வளர்வதை என்னால் பார்க்க முடிந்தது.
என்னுடைய கடைசி படம் சரியாக ஓடாதபோது நான் மாற்றுத் தொழிலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். சமைக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், ரெட் சில்லிஸ் ஈட்டரி என்ற உணவகத்தைத் தொடங்க நினைத்தேன்” எனக் கூறினார்.
’தீபிகாவின் கையை முத்தமிடுவேன்’
தொடர்ந்து தீபிகாவுடனான கெமிஸ்ட்ரி குறித்து பதிலளித்த ஷாருக், “எனக்கும் தீபிகாவுக்கும் காதலிப்பதற்கும் கட்டிப்பிடிப்பதற்கும் முத்தமிடுவதற்கும் ஒரு சாக்கு மட்டுமே தேவை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் என்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும், தீபிகா படுகோனின் கையை முத்தமிடுவேன். அதுதான் பதில்” என்றார்.
பதான் பட வெற்றி பற்றி பேசிய ஷாருக்கான், “நாம் செய்யும் செயல் வேலைக்கு ஆகாதபோது நம்மை நேசிப்பவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள், எனக்கு அன்பைக் கொடுக்கும் லட்சக்கணக்கானவர்கள் இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் என் பால்கனிக்கு வருவேன், நான் சோகமாக இருக்கும்போதும் என் பால்கனிக்கு வருவேன்.
நன்றியுள்ளவனாக இருப்பேன்
மக்களை அழைத்து எங்கள் படத்தை நிம்மதியாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்க வேண்டிய நிலைமை முன்னதாக இருந்தது. திரைப்படம் பார்ப்பதும், படம் எடுப்பதும் காதலில் திளைக்கும் அனுபவம் போன்றது, பதான் படத்தை மக்களுக்காக வெளியிட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் மகிழ்ச்சியாக படம் வெளியிடுவதை தடுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தபோதிலும் எங்கள் படத்தை ஆதரித்த பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.