Naatu Naatu: ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட மறுத்த ராம்சரண்- ஜூனியர் என்.டி.ஆர்..! காரணம் என்ன?
ஆஸ்கர் விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட மறுப்பு தெரிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர்.படம் இந்தியாவில் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்ப, சிறந்த ஒரிஜினல் சாங் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு வெளிநாட்டு கலைஞர்கள் நடனமாடி அசத்தினர்.
ஆட மறுத்த ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர்.
விழா மேடையில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடனம் ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆஸ்கர் விழா மேடையில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் ஆடுவதற்கு விழாக்கமிட்டி சார்பில் அணுகியதும், அவர்கள் ஆட மறுத்ததும் தெரியவந்துள்ளது.
ஆஸ்கர் தயாரிப்பாளர் ராஜ்கபூர் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, “பிப்ரவரியின் பிற்பாதியில் ராம்சமரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை நாங்கள் தொடர்பு கொண்டோம். ஆனால், மேடையில் நேரடியாக ஆடுவதை அவர்கள் வசதியாக உணரவில்லை. அவர்களது சொந்த விவகாரங்கள் மற்றும் ஒத்திகை செய்வதற்கு நேரம் குறைவாக இருந்தது. படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் 2 மாதங்கள் தீவிர ஒத்திகைக்கு பிறகு 15 நாட்கள் படப்பிடிப்பில் உருவாக்கப்பட்டது. ஆஸ்கர் விழாவில் அரங்கேறிய நாட்டு நாட்டு பாடல் நடனத்திற்கு 18 மணி நேரம் ஒத்திகை நடத்தப்பட்டது” இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்.
ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு மிரட்டலான நடனத்தை ஆடியிருப்பார்கள். உலகம் முழுவதும் பட்டையை கிளப்பிய இந்த பாடலுக்கு பல நாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட பலரும் நடனம் ஆடியுள்ளனர். நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எஸ்.எஸ்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகிய இருவரும் விழா மேடையில் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் இயக்குனர் ராஜமெளலி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆஸ்கர் விழா மேடையில் பாடகர்கள் ராகுல் சிப்ளிகுஞ்ச் மற்றும் காலா பைரவா இருவரும் நாட்டு நாட்டு பாடலை பாடி அசத்தினர். ஆஸ்கர் மேடையில் வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடியதை ஹாலிவுட் கலைஞர்கள் உள்பட பலரும் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது விழா மேடையில் சிறந்த ஆவண குறும்படத்திற்கு தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலையில் தாயில்லாமல் தவிக்கும் ரகு உள்பட யானைக்குட்டிகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளான பொம்மன் - பெள்ளி- யானைக்குட்டிகளுக்கான உறவுகள் ஆகியவற்றை மிக அழகாக ஆவணப்படுத்திய அந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை பலரும் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.