Oscar 2023: 95 ஆண்டுகால ஆஸ்கர் வரலாறு.. இதுவரை மறக்க முடியாத நிகழ்வுகள் என்னென்ன?
ஆஸ்கர் விருது வரலாற்றிலே இதுவரை மறக்க முடியாத பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து திரைப்பட கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கவுரவமாகவும், கனவாகவும் இருப்பது ஆஸ்கார் விருது. உலகெங்கும் உள்ள கலைஞர்களை சிறப்பிக்கும் விதமாக ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க நேரப்படி லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை இரவு 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை மறக்க முடியாத நிகழ்வுகளை கீழே காணலாம்.
- தொகுப்பாளரை தாக்கிய வில் ஸ்மித்:
கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கிறிஸ் ராக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது, அவர் பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் மனைவி பற்றி கிண்டலாக பேசினார். இதனால், கோபமடைந்த வில் ஸ்மித் விழா மேடையிலே கிறிஸ் ராக் முகத்தில் தாக்கினார்.
- விருதை மாற்றி அறிவித்த தொகுப்பாளர்கள்:
2017ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் அறிவிப்பு நடந்தது. அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வாரென் பீட்டி, மற்றும் பாயே டுனாவே இருவரும் இணைந்து சிறந்த திரைப்படத்திற்கான விருதை லா லா லேண்ட் படத்திற்கு அறிவித்தனர்.
அந்த படக்குழுவினரும் ஆஸ்கர் விருதை கையில் வாங்கி கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், விருது தவறுதலாக அறிவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக லா லா லேண்ட் படத்தின் தயாரிப்பாளர் ஹோரோவிட்ஸ் நேர்மையாக செயல்பட்டு மூன்லைட் தான் சிறந்த திரைப்படம். இது ஜோக் இல்லை என்று அறிவித்ததுடன் அதற்கான அறிவிப்பையும் வெளிப்படையாக மக்கள் முன்பு காட்டினார். பின்னர், மூன் லைட் படக்குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.
- நிர்வாணமாக ஓடிய சமூக ஆர்வலர்:
1974ம் ஆண்டு நடந்த 46வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நிகழ்ச்சியை அப்போதைய பிரபலம் டேவிட் நிவேன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று ஒரு நபர் நிர்வாணமாக விழா மேடையில் அங்குமிங்கும் நிவேனுக்கு பின்னால் ஓடினார். அவர் பின்னால் இருப்பதை அறியாமல் நிவேன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் பார்வையாளர்கள் பின்னால் நிர்வாணமாக ஓடிய நபரையே பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னர், பாதுகாவலர்கள் அவரை அகற்றினர். ராபர்ட் ஓபல் என்ற அந்த நபர் தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்கர் விருதை வாங்க மறுத்த மர்லின் பிராண்டோ:
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் என்றால் அவர் மர்லின் பிராண்டோ. ஹாலிவுட் மகாகலைஞனான மர்லின் பிராண்டோ நடித்த காட்பாதர் படம்தான் டான் உலகின் படங்களுக்கு ஒரு மகுடம் என்றே சொல்லாம். இன்றும் பல திரைப்பட கலைஞர்கள் காட்பாதர் படம் மூலமாகவே நிறைய கற்றுக்கொள்கின்றனர். 1973ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது மர்லின் பிராண்டோவிற்கு காட்பாதர் படத்திற்காக வழங்கப்படுகிறது.
அவருக்கு விருது அறிவிக்கப்பட்டபோது அவருக்கு பதில் நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான சச்சின் லிட்டில்பீதர் மேடைக்கு வந்து அமெரிக்காவின் பூர்வகுடிகளுக்கு ஆதரவாக இந்த விருதை மர்லின் பிராண்டோ வாங்க விரும்பவில்லை என்று அறிவித்தார். ஒட்டுமொத்த ஹாலிவுட் உலகமும் இந்த சம்பவத்தை எப்போதுமே மறக்காது.