Oscars 2023: ”இயற்கையின் காதல்” .. ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers படம் ஓர் பார்வை ..!
The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் விருதை வென்றது.
The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் விருதை வென்றது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடி வரும் நிலையில், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் The Elephant Whisperers படம் வெளியானது. முதலில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாவிட்டாலும், போக போக படம் பற்றிய பேச்சு அதிகரிக்கத் தொடங்கி அனைவரின் பேவரைட் ஆகவும் மாறியது. இந்த ஆவணப்படம் குறித்து காணலாம்.
இயற்கையின் காதல்
ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாமான நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காட்டில் தான் இந்த படம் முழுவதும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு ஆகியோரை சுற்றியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நான் காட்டு நாயக்கன் என சொல்லிக் கொண்டு பொம்மன் அறிமுகமாகும் காட்சியே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்து விட உயிருக்கு ஆபத்தான நிலையில் குட்டி யானை பொம்மன் பராமரிப்பில் விடப்படுகிறது. பொம்மனின் தாத்தாவும் தந்தையும் யானைப் பராமரிப்பாளர்களாக இருந்த நிலையில் அவர்களுக்குப் பிறகு பொம்மன் அந்த பணியை தொடர்கிறார். அதேசமயம் தமிழ்நாட்டில் குட்டி யானைகளை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஒரே பெண் பெள்ளி மட்டுமே உள்ளார்.
முதலில் பெரிய யானைகளை பராமரித்து வந்த பொம்மன், யானை ஒன்றின் தாக்குதலுக்குப் பிறகு குட்டி யானைகளை பராமரிப்பார். அப்போது தான் ரகு யானை அவரிடம் வரும். பொம்மனும் பெல்லியும் இணைந்து ரகுவை வளர்க்கின்றனர். ரகு காட்டுக்குள் கொண்டு போய் விட்டாலும் மற்ற யானைகளுடன் இணைய மறுக்கும்.
தொடர்ந்து ரகுவுக்கு பின்னால் அம்முகுட்டி என்ற யானை இவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் பொம்மன் - பெள்ளிஇருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்பு ஒருநாள் வனத்துறையால் வேறு ஒருவரிடன் யானை கூட்டிச் செல்லப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தையை, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல பொம்மனும், பெல்லியும் கலங்கி நிற்கின்றனர்.
அதேசமயம் அம்மு யானை அவர்களுக்கு துணையாக இருக்கிறது. இந்த தம்பதியினர் கைவிடப்பட்ட யானை குட்டிகளை வளர்ந்த முதல் தம்பதி என சொல்லப்படுகிறார்கள். குட்டியானையின் சேட்டைகள், காடுகளின் பருவநிலை, பழங்குடியின மக்கள் என இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் நம்மை அந்த 41 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்தை பார்வையை விலக்க முடியா வண்ணம் காண வைக்கிறார்கள்.