Oppenheimer: இந்தியாவில் களைகட்டும் ப்ரீ புக்கிங்... 100 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடியில் ரிலீஸ்... ‘ஓப்பன்ஹெய்மர்’ ஃபீவரில் ஹாலிவுட்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் க்ரிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் படத்தின் ப்ரீ புக்கிங் இந்தியாவில் களைகட்டி வருகிறது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வரும் ஜுலை 21ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது.
ஓப்பன்ஹெய்மர்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோஃபர் நோலன், அணு ஆயுதத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவரான ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஓப்பன்ஹெய்மராக பிரபல நடிகர் சிலியன் மர்ஃபி நடித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் சிலியன் மர்ஃபி முதன்முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தைத் தழுவி இப்படத்தை உருவாகி இருக்கிறது.
24 மணிநேர திரையிடல்
ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை 24 மணி நேரமும் திரையிடப்போவதாக அறிவித்துள்ளது பி.வி.ஆர் நிறுவனம். ரசிகர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3 லட்சம் டிக்கெட்கள் விற்பனை
300,000 tickets sold for #Oppenheimer on @bookmyshow in India 🇮🇳
— Ramesh Bala (@rameshlaus) July 18, 2023
About 42% of this tickets are for #IMAX
54,000 tickets are sold on @bookmyshow for #BarbieMovie in India 🇮🇳
8% have bought for both - #Barbenheimer
கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் இந்தப் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 3 லட்சம் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 42 சதவிகிதம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கான டிக்கெட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நாளில் வெளியாக இருக்கும் மற்றொரு படமான பார்பீ படத்திற்கு 54,000 டிக்கெட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த மொத்த எண்ணிக்கையில் 8 சதவிகிதம் மக்கள் ஒரே நாளில் இந்த இரண்டு படங்களும் செல்ல இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன
கிராஃபிக்ஸ் காட்சிகளே இல்லாத ஓப்பன்ஹெய்மர்
எப்போது தனது படங்களை முடிந்த அளவிற்கு தத்ரூபமாக எடுக்க நினைப்பவர் நோலன். தற்போது ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஒரு படி மேலே சென்று மிக அசாத்தியமான ஒரு சாதனையைச் செய்துள்ளார் நோலன். கிட்டத்தட்ட 100 மில்லியன் செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஒரு கிராஃபிக்ஸ் காட்சி கூட இல்லாமல் முற்றிலும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டுக்கள்
ஏற்கெனவே படத்தின் சிறப்புத் திரையிடல்களில் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் இந்தப் படம் கிறிஸ்டோஃபர் நோலனின் மாஸ்டர் பீஸ் என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
100 நாட்களுக்குப் பிறகே ஓடிடி ரிலீஸ்
ஓப்பன்ஹெய்மர் படம் குறித்தான மற்றொரு கவணிக்கத்தக்க தகவல் என்னவென்றால் படம் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் இப்படத்தை வெளியிடுவோம் என படத்தின் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.