நகைச்சுவை என்ற பெயரில் க்ரிஞ்ச்.. ஃபகத் பாசிலுக்கு இப்படி ஒரு சோதனையா.. ரசிகர்கள் வருத்தம்
ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ஓடும் குதிர சாடும் குதிர படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் ஒணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்தியா முழுக்க இருக்கும் கேரள மக்கள் ஓணத்தை சிறப்பானதாக மாற்ற திட்டமிட்டு வருகிறார்கள். புத்தாடைகள், ஆட்டம் பாட்டம் என அனைத்திற்கும் தயாராகிவிட்டனர். கல்லூரிகளிலும் ஓணத்திற்கான ஸ்பெஷல் தீம் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோன்று மக்களின் மற்றொரு கொண்டாட்டமாக பார்ப்பது சினிமா. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பல படங்கள் வெளியாகியுள்ளன. கல்யாணி பிரிதர்ஷன் நடித்துள்ள லோஹா திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் சூப்பர் ஹீரோ கதை கொண்ட படமாக பார்க்கின்றனர். டோமினிக் அருண் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தை திரை விமர்சகர்கள் நல்ல விதமாக பாராட்டி வருகின்றனர். மலையாள சினிமாவில் ஹாலிவுட் தரத்திற்கு சூப்பர் ஹீரோ படமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மலையாள சினிமாவின் ஐகான் நடிகராக திகழ்பவர் ஃபகத் பாசில். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படத்தை படு மோசமாக கலாய்த்து வருகின்றனர்.
ஃபகத் பாசில், கல்யாணி பிரிதர்ஷன், ரேவதி பிள்ளை உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ஓடும் குதிர சாடும் குதிர திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. கதை, திரைக்கதை சரியாக அமையவில்லை. இதெல்லாம் ஒரு காமெடி படமா என்ற அளவிற்கு சமூவலைதளங்களில் ரவுண்டு கட்டி விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ஃபகத் பாசிலிடம் இருந்து இப்படியொரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஃபகத் எங்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி வருகின்றனர். காதல் திருமணம் பின்னணியில் நகைச்சுவையாக உருவான இப்படம் ரசிக்கும் படி இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
முன்னதாக ஃபகத் பாசில் தமிழில் நடித்த மாரீசன் திரைப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. முதல் பாதி நன்றாக இருந்தும் இரண்டாம் பாதியில் கதை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஃபகத் பாசிலுக்கு இந்த ஆண்டு மோசமானதாக இருக்கிறது என ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.





















