DMK vs Congress: கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என திமுகவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி- திடீர் திருப்பம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் இறங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் தோல்விக்கு மேல் தோல்வியை பெற்று வரும் காங்கிரஸ் தமிழகத்தில் திமுகவின் துணையோடு எம்.பி மற்றும் எம்எல்ஏக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தொடர்பாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளது காங்கிரஸ்.
திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்
தமிழகத்தில் திமுக - அதிமுக என இரண்டு அணிகள் மட்டுமே தேர்தலில் நேருக்கு நேர் மோதி வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் தவெகவும் களத்தில் இறங்கியுள்ளது. எனவே தவெக தலைவர் விஜய் தங்கள் அணியை பலப்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் தரவில்லையென்றால் தவெகவிற்கு பல்டி அடிக்க காங்கிரஸ் கட்சியின் ஒரு சில தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசியிருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை விட உத்தரபிரதேச ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக கூறியிருந்தார்.
இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், திமுகவிற்கு ஆதரவாக வைகோ, திருமாவளவன் ஆகியோர் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில், உட்கட்சி விவராகத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகவை நேரடியாகவே எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுகவினர், மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
இந்த சூழ்நிலையில், மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு சதவிகிதம் என்ற பட்டியலை வெளியிட்டு அதில் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! என குறிப்பிட்டுள்ளார்.
அசால்டு செய்யும் திமுக
ஆனால் திமுகவோ மாணிக்கம் தாகூர் கருத்தை கண்டுகொள்ளவில்லையென்றே கூறப்படுகிறது. திமுகவால் தான் தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதாக தெரிவிக்கும் திமுக மூத்த நிர்வாகி, காங்கிரஸ் கட்சி இல்லாமலே தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என திட்டவட்டமாக கூறுகிறார். எனவே தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் தேர்தல் நெருங்க, நெருங்க என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















