Seeman: கபடி விளையாட போன சீமான்.. அரிவாளை எடுத்து விரட்டிய அப்பா.. இந்த கதை தெரியுமா?
பைசன் படத்தைப் பார்க்கும்போது கோயில் திருவிழாவுக்கு சென்று வந்த மனநிலை உள்ளது. அங்கு சென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, ஒவ்வொரு காட்சியும் கடக்கும்போது அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி உள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் “பைசன்”.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், மதன், பசுபதி, அமீர், லால் என பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக் குவித்துள்ளது. இப்படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பைசனை பாராட்டிய சீமான்
இதனிடையே நாதக ஒருங்கிணைப்பாளர் பைசன் படத்தை பார்த்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ள பைசன் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதிப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என ஒவ்வொரு படத்திலும் அவரது தளத்தை கூட்டி கூட்டி இதுவரை சொல்லப்படாத கதையை சொல்லிக் கொண்டே வருகிறார்.
பைசன் படத்தைப் பார்க்கும்போது கோயில் திருவிழாவுக்கு சென்று வந்த மனநிலை உள்ளது. அங்கு சென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, ஒவ்வொரு காட்சியும் கடக்கும்போது அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி உள்ளது. படம் ஓடுகிறது என்ற மனநிலை வரவே இல்லை. அதனுள் எல்லா கேரக்டரும் என் பக்கத்தில் வாழும் உணர்வு ஏற்பட்டது.
சீமானை விரட்டிய அப்பா
பரோட்டாவுக்காக ஊர் ஊராக சென்று கபடி விளையாடிவர்கள் நாங்கள். பைசன் படத்தை ஒரு ஆய்வாக தான் நான் பார்க்கிறேன். பல நடிகர்களை வைத்து ஒரு இயக்குநர் படம் எடுத்திருக்கிறார் என யாருமே நம்ப மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக இப்படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வசனமும் இந்த காலத்திற்கும், எதிர்க்காலத்திற்குமான படிப்பினையாக உள்ளது. மாரியின் வலி உரையாடல்களாக பதிவாகியிருக்கிறது.
படத்தில் இடம்பெற்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என கூறலாம். எல்லாவற்றையும் விட பைசன் படம் மூலம் மாரி செல்வராஜ் ஜெயித்தது எனக்கு இரண்டு மடங்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து பேசிய சீமான், ரஜிஷா விஜயனின் நடிப்பை பாராட்டினார். ஒரு அக்காவாக இல்லாமல் தாயாக இருந்து தம்பியை (துருவ்) உத்வேகபடுத்தும் காட்சியை சுட்டிக் காட்டினார். எங்க அப்பா நான் கபடி விளையாட செல்கிறேன் என்றால் அரிவாளை எடுத்துக் கொண்டு விரட்டியிருக்கிறார்.
ஆரம்பத்தில் கபடி விளையாட போன இடத்தில் பிரச்னையாகி விட்டதால் அவருக்கு பெரிய அளவில் விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால் காலப்போக்கில் நான் விளையாட விதம் பற்றி மற்றவர்கள் பாராட்டி சொல்ல ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு பிடிப்பு ஏற்பட்டது. உன் நண்பர்கள் எல்லாரும் காத்திருக்கிறார்கள் நீ கபடி விளையாட போ என சொன்னார்” என மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.





















