நாயகன் முதல் ராரா சரசுக்கு ராரா வரை: நவம்பரில் ஒரே நாளில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக குடும்ப பின்னணியை கொண்ட மூத்தக்குடி படம் நவம்பரில் திரைக்கு வருகிறது.
கமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற நாயகன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி நடித்திருக்கும் லைசென்ஸ், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட மூத்தக்குடி உள்ளிட்ட திரைப்படங்கள் நவம்பர் 3ம் தேதி ரிலீசாக உள்ளன.
நாயகன்
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நாயகன் படம் வரும் நவம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. 1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்துள்ள நாயகன் படத்தில் கமல், சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையை பின்னணியாக கொண்ட படத்தின் கதையில் வேலு நாயக்கராக நடித்த கமல்ஹாசன், தேசிய விருதை பெற்றிருந்தார். இந்த நிலையில் நாயகன் படம் கமல்ஹாசன் பிறந்த நாளை ஒட்டி வரும் நவம்பர் 3ம் தேதி ரீ ரிலீசாக உள்ளது.
லைசென்ஸ்:
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகும் லைசென்ஸ் படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி ரிலீசாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி திரைப்படத்தில் அறிமுகமாகி இருப்பது இதுவே முதல் தடவை கவுண்டமணி நடித்த ‘ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன், லைசென்ஸ் படத்தை இயக்கியுள்ளார். ஜேஆர்ஜி புரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராதா ரவி, என். ஜீவானந்தம், விஜய் பாரத், பழ. கருப்பையா, அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
மூத்தக்குடி
உண்மை சம்பவத்தை அடிப்படையாக குடும்ப பின்னணியை கொண்ட மூத்தக்குடி படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூத்தக்குடி படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர். விஜயா நடித்துள்ளார். சாவி படத்தின் ஹீரோவாக இருந்த பிரகாஷ் சந்திரா, இந்த படத்தை தயாரிப்பதுடன் தானே நடித்துள்ளார். மூன்று காலக்கட்ட நிகழ்ந்த கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது.
ராரா சரசுக்கு ராரா
லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ராரா சரசுக்கு ராரா படமும் நவம்பர் மூன்றாம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்கை வாண்டர்ஸ் என்டரெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்துள்ள படத்தை கேஷவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை கூறும் ராரா சரசுக்கு ராரா படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல், கேபிஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவி வர்மா, அபிஷேக், பெஞ்சமின் என பலர் நடித்துள்ளனர்.
இவை மட்டுமில்லாமல் ரூல் நம்பர்4, 12வது பெயில், கபில் ரிட்டர்ன்ஸ், கொம்புகுதிரைகள் உள்ளிட்ட திரைப்படங்களும் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வருகின்றன.