ஆளுங்கட்சியான பிறகு வெளியாகும் உதயநிதியின் முதல் படம்... கவனத்தை ஈர்க்க போட்டி போடும் திமுகவினர்!
Nenjuku Needhi : ‛கருணாநிதி பேரனாக, முதல்வர் ஸ்டாலினின் மகனாக, நடிகராக, இளைஞரணி செயலாளராக, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக தற்போது உருவெடுத்து நிற்கும் உதயநிதி, திமுகவின் வருங்காலம் என்பதால்..’
2009ல் தான் தயாரித்த ஆதவன் படத்தில், சமையல்காரர் கெட்டப்பில் சிறிய ஹெஸ்ட் ரோல் செய்த உதயநிதி, அதன் பின் தானே நடிகராக களமிறங்கினார். 2012 ல் ராஜேஷ் இயக்கத்தில் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோ உதயநிதி உருவானார். ‛திமுக ஆட்சியில் தயாரிப்பாளராக இருந்தவர்கள், எங்கள் ஆட்சியில் நடிக்கவும் செய்கிறார்கள்’ என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு, அப்போது அது பார்க்கப்பட்டது.
முதல்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற, உதயநிதி அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன் என , இடைவெளிக்கு இடைவெளி தனது படங்களை அவ்வப்போது இறக்கிக் கொண்டே இருந்தார் உதயநிதி. உதயநிதியை வெறுமனே கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்று இறக்குமதி செய்யாமல், பிரபல ஹீரோ என்கிற முகவரியோடு களமிறக்க நினைத்த திமுக தலைமையின் திட்டம், சரியாக செயல்படுத்தப்பட்டது.
திடீரென உதயநிதி வந்து பிரச்சாரத்திற்கு சென்றால், ‛இவருக்கு பிரச்சாரத்தை பற்றி என்ன தெரியும்’ என்று கூட பேச வாய்ப்பிருந்தது. ஆனால், ஒரு சினிமா செலிபிரிட்டியாக உதயநிதி வரும் போது, அவர் முகம் தெரிந்த நடிகராக மக்களை சந்திப்பார், அவருக்காக ஒரு கூட்டம் வரும் என்கிற அடிப்படை உண்மையோடு அரசியலில் களமிறங்கினார் உதயநிதி . திமுக எதிர்கட்சியாக இருந்த போதே, திமுகவின் முகமாக மாறினார். உண்மையில், திமுகவின் ‛ஸ்டார்’ பிரச்சாரகராக உதயநிதி முன்னிறுத்தப்பட்டார், அக்கட்சியினரால் ஏற்றுக் கொள்ளவும் பட்டார்,
திமுக ஆட்சியைப் பிடித்ததில், உதயநிதிக்கு பெரும் பங்கு என்று, முதல்வர் ஸ்டாலினே கூறிய பிறகு, வேறு என்ன பாராட்டு வேண்டும். கருணாநிதி பேரனாக, முதல்வர் ஸ்டாலினின் மகனாக, நடிகராக, இளைஞரணி செயலாளராக, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக தற்போது உருவெடுத்து நிற்கும் உதயநிதி, திமுகவின் வருங்காலம் என்பதால், அவர் இல்லாத போஸ்டர்கள், பேனர்கள், அழைப்பிதழ்களை பார்க்கவே முடியாது. அமைச்சர் ஆகிறார் உதயநிதி என்கிற ஆருடம் போய்க் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த அரசின் அசைக்க முடியாத அதிகாரமாக நிற்கிறார் உதயநிதி. கடந்த 2020 ல் மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்த சைக்கோ நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின், நீண்ட இடைவெளிக்குப் பின் போனிகபூர் இயக்கத்தில், அருண்குமார் காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்தியில் வெளியாகி தேசிய விருதுப் பெற்ற ‛ஆர்ட்டிக்கல் 15’ படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஜாதிய ரீதியான வன்கொடுமைகளை தோலுரிக்கும் படமாக, அது இருக்கும். சமூக நீதி பேசிய வரும் இந்த காலகட்டத்தில், தங்களுக்கு இந்த படம் பெரிய பலமாக இருக்கும் என நம்புகிறது திமுக. அதில் உதயநிதி நடித்திருப்பது, அவர்களுக்கு இன்னும் பலம். எதிர்கட்சியாக இருக்கும் போதே அக்கட்சியினரால் கொண்டாடப்பட்ட உதயநிதி, தற்போது ஆளுங்கட்சியாகி முதன்முறையாக வெளியாகும் உதயநிதி படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இது தலைமையின் கவனத்தை ஈர்க்கும் என்பதால், போட்டி போட்டு ‛நெஞ்சுக்கு நீதி’யை நெஞ்சில் சுமக்கத் தொடங்கியுள்ளனர். மெகா பேனர்கள், சிறப்பு காட்சி ஏற்பாடுகள், இலவச டிக்கெட்டுகள் என படத்தை பாமரர் வரை கொண்டு செல்வதற்கான வேலைகளை உடன்பிறப்புகள் தொடங்கிவிட்டனர். பிற மெகா ஸ்டார்களபை் போல, உதயநிதியின் இந்த படத்திற்கும் மெகா ஓப்பனிங் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மெனக்கெட்டு வருகின்றனர். அநேகமாக, நாளை நெஞ்சுக்கு நீதி கொண்டாடப்படலாம்!