Jovika: ‘படிப்பு ரொம்ப முக்கியம்.. திசை திருப்புவாங்க’ : சீறிய ஜோவிகா.. வைரலாகும் கோபிநாத் வீடியோ..
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் கல்வி குறித்து முன்பு ஒருமுறை பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்வி முக்கியமில்லை என சொன்ன நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் கல்வி குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பேசிய ஜோவிகா, தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9 ஆம் வகுப்புடன் நின்று விட்டதாக சொல்லியிருந்தார். ஆனால் இதைக்கேட்ட சக போட்டியாளரான நடிகை விசித்ரா, என்னதான் இருந்தாலும் 12 ஆம் வகுப்பு வரை அடிப்படை கல்வி பயின்றிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதை உதாசீனப்படுத்திய ஜோவிகா, நேற்று ஒளிபரப்பான எபிசோடில் விசித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “ படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்ற கருத்தை ஜோவிகா தெரிவித்திருந்தார். இது இணையத்தில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பல நடவடிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஜோவிகாவின் கருத்து சுமாராக படிக்கும், அல்லது தனக்கு படிப்பு வரவில்லை என நினைக்கும் நபர்களை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனை கமல் கண்டிக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துகள் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் பிரபல தொகுப்பாளர் நீயா, நானா கோபிநாத் கல்வி குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
#BiggBossTamil7 வீட்டில் #Jovika "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு நிறைய பேரு🔥விடுகிறார்கள். #Vichithra சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கலாம்.. ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த… pic.twitter.com/pcgFqoIcBq
— Surya Born To Win (@Surya_BornToWin) October 6, 2023
கல்லூரி நிகழ்வு ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “படிச்சி எவன் ஜெயிச்சிருக்கான், படிக்காதவர்கள் தான் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர், காமராஜர், பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் படித்தாரா என்றெல்லாம் கேட்கிறோம். படிக்காமல் ஜெயித்தவர்கள் 10 பேரை சொல்ல முடியும். ஆனால் 11வது ஒரு ஆளை சொல்ல முடியாது. எவனும் கிடையாது. ஆனால் படிச்சி ஜெயிச்ச 10 லட்சம் பேரை நான் சொல்வேன். உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் நமக்கு முக்கியமானது. அறிவு தான் அர்த்தம் காக்கும் கருவி. இன்னைக்கு தமிழ்நாட்டுல இந்தி திணிப்பு, நீட் என பிரச்சினைகளை கொடுக்கிறார்கள். ஆனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு வருடத்தில் நீட் தேர்வில் தமிழ் மாணவர்கள் தான் டாப்பர்ஸ்களாக வருவார்கள். அந்த ஃபார்முலா பற்றி தெரிஞ்சா போதும்.
அப்படி பார்க்கும்போது கல்வி என்பது ரொம்ப முக்கியமானது. காமராஜர் வந்த பிறகு தான் தமிழத்தில் கல்வி என்பது பெரிய அளவில் தலைதூக்கியது. பசி இருக்கும் பிள்ளையால் படிக்க முடியாது என நினைத்த காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். படிப்பதற்கான வாய்ப்பை பள்ளிக்கூடத்தில் தான் உருவாக்க வேண்டும். மதிய உணவு திட்டம் வந்த பிறகு தான் நம்முடைய தாத்தா, அப்பாக்கள் படிக்க தொடங்கினார்கள். கடைக்கு வேலைக்கு போனவர்கள் தொடங்கி களை எடுக்கும் வேலை சென்றவர்கள் வரை எல்லோரும் பள்ளிக்கூடம் போனது காமராஜர் கொண்டு வந்த திட்டத்தால் மட்டும் தான். ஆனால் அவரோ படிக்காதவர்.
அப்படி படிக்காத காமராசர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை யோசிக்க வேண்டும். மதிய உணவுத்திட்டம் அடுத்தத்தடுத்து சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்தது. படிக்காத காமராசர் ஏன் படிக்க வைக்க ஆசைப்பட்டார். காரணம் படிக்காத என்னால் இவ்வளவு செய்ய முடியும் என்றால் படித்த என் பிள்ளைகளால் எவ்வளவு செய்ய முடியும் என அவர் கண்ட கனவு தான் இன்று என் முன்னால் மாணவர்களாகிய நீங்கள் இருக்குரீர்கள்.
போய் வடநாட்டில் இருந்து வருபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வறுமை இருந்தால் வேலைக்கு கூப்பிட்டு போய் விடுவார்கள். உசுரே போனாலும் பிள்ளைங்களை படிக்க வேண்டும் என நினைக்கிறது தமிழ்நாட்டில் தான். குண்டுமணி தங்கத்தை கூட பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டிற அம்மாக்கள் இருக்கிற ஊர் இது. சமூக வலைத்தளங்களில் விளையாட்டா படிப்பு ஒன்னுமே கிடையாது என சொல்பவர்களிடம் போகாதீர்கள். அவர்கள் எல்லாம் மக்கு பசங்க.
படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. படிப்பு தான் சமூக நீதியை சொல்லி கொடுத்துள்ளது. ரோட்டில் ஏதாவது நடந்தால் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம், தட்டிக்கேட்க மாட்டோமா. அந்த அறிவை சமூக நீதி கொடுத்தது. கல்வி கொடுத்துச்சு, பெரியார் கொடுத்தார்” என உணர்ச்சிமிக்க வகையில் கோபிநாத் பேசியிருந்தார்.