ஆரம்பத்துல எல்லாமே தோல்விதான்.. நான் செஞ்சது இந்த விஷயம்தான்.. ரகசியங்களை உடைக்கும் இமான்..
எத்தனையோ வாழ்க்கையையே புரட்டிப்போட்ட தருணங்கள் வந்தாலும், எனக்கான பணியை விரும்பிச்செய்தேன் என்கிறார் இசையமைப்பாளர் டி. இமான்.
சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தேன் எனவும், எந்த இலக்கும் இல்லாமல் பயணித்த எனக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதமாக இந்த முன்னேற்றத்தை நினைத்துக்கொள்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் டி. இமான்.
“அழகிய அசுரா , அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா? என்ற விசில் பட பாடல் மூலம் திரையுலக வெளிச்சத்திற்கு வந்தவர் தான் டி. இமான். சிறு வயதில் இருந்தே இசையில் அதிக நாட்டம் கொண்ட இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தார். ஆனால் இப்படம் அதிகளவில் ஹிட் அடிக்காததால் அந்தளவிற்கு திரையுலகில் இமானின் இசை கால்பதிக்கவில்லை. ஆனால் தற்போது காதல், பெற்றோர் பாசம், குடும்ப உறவு என அனைத்திற்குமான ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள இசையமைப்பாளர்களில் ஒருவராக இமான் பயணித்துவருகிறார். குறிப்பாக மைனா, சீமாராஜா,விஸ்வாசம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை, கும்கி, வெற்றிவேல், சிகரம் தொடு, கயல், தொடரி, ஜில்லா, றெக்க போன்ற பல்வேறு படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் இப்போதும் நம்முடைய காதுகளில் ரீங்காரமாக ஒலித்து வருகிறது.
இப்படி தொடர்ந்து பல படங்களின் மூலம் ஹிட் பாடல்களைக்கொடுத்த இமான் வாழ்வில் ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார் என்றால் நம்பவா முடிகிறது? ஆம் திரைத்துறையில் ஆரம்பத்தில் தொடர்ந்து 10 முதல் 12 படங்கள் இசையமைத்த பாடல்கள் வரவே இல்லை என வேதனையுடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
அதில், தான் ஒரு பிள்ளையாகவே இருந்ததால் என் அம்மாவுடனே இருப்பேன். ஆனால் இளம் வயதிலேயே என் அம்மாவின் பிரிவு தான் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். மேலும் என்னுடைய திரைவாழ்க்கையின் ஆரம்பத்தில் தமிழன்,விசில் போன்ற படங்களுக்கு இசையமைத்தேன். அப்படங்கள் அந்தளவிற்கு ஹிட் ஆகவில்லை என்றாலும் பாடல்கள் ஒரளவிற்கு ஹிட் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து பல படங்களுக்கு கமிட் ஆனேன். இதற்கான பட பூஜைகள் அனைத்தும் ஏவிஎம் போன்ற ஸ்டுயோக்களில் நடந்தது. தொடர்ந்து 10 நாள்கள் சூட்டிங் நடந்தது. ஆனால் என்ன பல பொருளாதார பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவரவே இல்லை.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இதோடு என் பெயர் படங்களில் வருவதால் தானோ படங்கள் வெளிவராமல் உள்ளது என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டேன். இதனையடுத்து எந்த இலக்கும் இல்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடைய பணிகளை மனமுவந்து செய்தேன். இதுவரை ஹோலிவுட், பாலிவுட் போன்ற படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற மாஸ்டர் மைன்டு எனக்கு இல்லை. நாளைக்கு என்ன நடக்கப்போகிறது? என்ற நினைப்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால் கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் தான் என் வெற்றிக்கு உதவியது" எனக் கூறினார்.
“இதோடு என் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது? என்ற நினைப்பு எதையும் வைத்திருக்க மாட்டேன். ஆனால் எது நடக்குமோ? அது நன்றாக நடக்கும் என்ற நினைப்பில் இருந்துவிட்டேன். இதற்கு காரணம் என் வாழ்க்கை தந்த பாடங்கள் தான். எத்தனையோ வாழ்க்கையையே புரட்டிப்போட்ட தருணங்கள் வந்தாலும், எனக்கான பணியை விரும்பிச்செய்தேன்” என்கிறார் இசையமைப்பாளர் டி. இமான்.