Mohanlal: ”நான் எங்கேயும் ஓடி ஒளியல.. இங்கதான் இருக்கேன்..” - மோகன்லால் விளக்கம்!
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தது குறித்து தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
நடிகர் மோகன்லால்
மலையாள திரையுலகில் நடிகர்கள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் விவரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அது வெளியான பின் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மலையாள நடிகர் மோகன்லால் திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில்,”நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை. மலையாள திரையுலகம் இந்த அறிக்கையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நான் அம்மா சங்கத்தின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளேன். குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை. கேரள திரைத்துறையில் மொத்தம் 21 சங்கங்கள் இருக்கின்றன அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அம்மா சங்கம் மீது அவதூறு பரப்புவது சரியாக இருக்காது. மேலும் ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையை முழுவதுமாக தான் படிக்கவில்லை என்றும் ஆனால் தான் அந்த அறிக்கையை வரவேற்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் நடிகர் திலீப் குமாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக இந்த இந்த குழு விசாரணைச் செய்தது. விசாரணை அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்பிக்கப்பட்ட பின்பும் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் WCC என்கிற பெண்கள் அமைப்பின் மூலம் இந்த அறிக்கையின் முடிவுகளை வெளியிட கேரள அரசுக்கு வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடிகைகளின் பெயர்கள் நீங்க இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்கள் சித்திக் , ஜேயசூர்யா , முகேஷ் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். குற்றம் சுமத்தப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விராசரணையைத் தொடங்கியுள்ளது கேரள காவல் துறை.