(Source: ECI/ABP News/ABP Majha)
Parking - Annapoorani : பாக்ஸ் ஆஃபிஸை தாக்கிய மிக்ஜாம் புயல்.. பார்க்கிங் - அன்னபூரணி முதல் வார பாக்ஸ் ஆஃபிஸ்
மிக்ஜாம் புயல் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் சேர்த்து சமீபத்தில் வெளியான பார்க்கிங் அன்னப்பூரணி உள்ளிட்டப் படங்களின் வசூலையும் பாதித்துள்ளது
மிக்ஜாம் புயல்
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்துள்ளது. சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் கடும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவி வருகிறார்கள். மக்களின் வாழ்க்கை மட்டுமில்லாமல் மிக்ஜாம் புயல் சமீபத்தில் வெளியாகிய இரண்டு படங்களின் வசூலை பெரியளவில் பாதித்துள்ளது.
பார்க்கிங்
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு கார் பார்க்கிங் செய்வதற்காக இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வெளியான முதல் நாளில் ரூ 35 லட்சம் வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது நாள் 74 லட்சங்களும் மூன்றாவது நாளில் 73 லட்சங்களும் வசூல் ஈட்டியது பார்க்கிங் திரைப்படம். இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் 4 மற்றும் 5ஆவது நாள்களில் படத்தின் வசூல் சரிந்துள்ளது. 4ஆவது நாள் 27 லட்சங்களும், 5ஆவது நாள் 23 லட்சங்களும் வசூல் செய்துள்ள பார்க்கிங் படம், மொத்தம் ஐந்து நாட்களில் பார்க்கிங் திரைப்படம் 2. 31 கோடி வசூலித்துள்ளது.
அன்னபூரணி
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக ‘அன்னபூரணி’ நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி நடிகர்கள் ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
அன்னபூரணி திரைப்படம் முதல் நாளில் ரூ. 60 லட்சம் வசூல் செய்திருந்த நிலையில் இரண்டாவது நாள் 90 லட்சமும், மூன்றாவது நாள் 87 லட்சமும் வசூல் செய்திருந்த நிலையில் 4 ஆவது நாளில் 36 லட்சங்களையும் 5வது நாளில் 32 லட்சங்களையும் வசூல் செய்தது. ஆறாவது நாள் 41 லட்சங்களையும் வசூலித்த அன்னபூரணி திரைப்படம் இதுவரை மொத்தம் ரூ.3.51 கோடி வசூலித்துள்ளது.
பார்க்கிங் மற்றும் அன்னபூரணி ஆகிய இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இரு படங்களின் வசூலையும் பாதித்துள்ளது.