Merry Christmas: தமிழில் படம் எடுக்க உதவிய தியாகராஜன் குமாரராஜா.. மெரி கிறிஸ்துமஸ் பட இயக்குநர் நெகிழ்ச்சி!
Merry Christmas: “நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு தியாகராஜா குமாரராஜா நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்”
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பொங்கல் ரிலீஸில் விஜய் சேதுபதி
மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இந்நிலையில், சென்னையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், நடிகை கத்ரீனா கைஃப், நடிகர்கள் சண்முகராஜன், கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தியாகராஜன் குமாரராஜா செய்த உதவி
இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பேசுகையில், ''இந்தத் திரைப்படத்தைத் தொடங்கும் போது இந்தியில் மட்டும் இயக்குவது என்றும், விஜய் சேதுபதியை இந்தியில் அறிமுகப்படுத்தலாம் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. மும்பையில் இருந்தாலும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருந்தது. அது ஏன் இந்த படமாக இருக்கக் கூடாது என்று சிந்தித்தேன்.
விஜய் சேதுபதியை வைத்து எப்போதாவது ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இப்படத்தினை தொடங்கும் போது கோவிட் காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவை சந்தித்தேன். அவர் மும்பை வந்திருந்தபோதும் சந்தித்து உரையாடினோம்.
இந்த கதையை தமிழிலும் உருவாக்கலாமே..! என அவர் கேட்டார். அதற்கு நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு அவர் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்ட மிட்டபடி சற்று கடினமாக உழைத்து இப்படத்தை தமிழிலும், இந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.
விஜய் சேதுபதி உடனான சந்திப்பு
நானும் நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். தற்போது அனைத்து தமிழ் படங்களும் மும்பையிலும் வெளியாகின்றன. இதனால் என்னுடைய படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கிடையே மராத்தி மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.
மெல்பெர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசினோம். அவருக்கு 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்ததற்காக அவர் விருதினை பெற்றார். என்னுடைய இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்த தபுவிற்கும் விருது கிடைத்தது. ஐந்து நிமிட சந்திப்பிலேயே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் மட்டுமே உறுதியாகி இருந்தார்.
விஜய் சேதுபதியை சந்தித்த பிறகு மும்பைக்கு திரும்பி, என்னுடைய குழுவினருடன் விஜய் சேதுபதி குறித்தும், விஜய் சேதுபதி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவாதித்தோம். அனைவருமே இந்த ஜோடி குறித்து வியப்புடன் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்தனர்'' எனப் பேசியுள்ளார்.