14 Years Of Mayandi Kudumbathar: மக்களை தொடர்புபடுத்தும் எளிய கதை... 14 ஆண்டுகளை நிறைவு செய்யும் மாயாண்டி குடும்பத்தார்
இயக்குனர் ராசு மதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடைசியாக திரையரங்குகளில் உங்களது குடும்பத்துடன் நீங்கள் ரசித்து பார்த்து படம் எது. குடும்பத்துடன் ரசித்துப் பார்த்த திரைப்படம் என்றால் உங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, தாத்தா அல்லது பாட்டி இப்படி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அந்தப் படத்துடன் ஒன்றியிருக்க வேண்டும். கைதி படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்துவிட்டு அது என் அம்மாவிற்கு பிடித்தது என நான் நம்பத் தயாராக இல்லை.
இந்திய சினிமா அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் இருக்கும் அல்லது இருந்த மிகப்பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால் நாடகியத் தன்மையை (drama) அது கொண்டிருந்தது.
இன்று பலகோடிகள் செலவில் தொழில் நுட்பரீதியாக எத்தனையோ புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சில படங்கள் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையான கதை சொல்ல வழியாக மக்களிடம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றுவிடுவதை நீங்கள் கவணித்திருக்கிறீர்களா. தவமாய் தவமிருந்து, முத்துக்கு முத்தாக, பூ, பருத்திவீரன், சுப்ரமணியபுரம், சாட்டை என இந்தமாதிரியானப் படங்கள் மக்களால் எல்லா காலத்திலும் ரசிக்கப்படுவது ஏன்?
இன்று ஒரு படத்தை அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை தொலைக்காட்சியில் பார்க்க முடிவது அரிதானதாகிவிட்டது. ஆனால் மேல் குறிப்பிட்டப் படங்களை நம் பெற்றோர்கள் மட்டுமில்லை எத்தனையோ முறை சலிக்காமல் பார்த்திருக்கிறோம் இல்லையா?
மக்கள் தங்களைப் போன்ற ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு கதையைப் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வை இந்தப் படங்கள் ஏற்படுத்துவதுதான் இதற்கு காரணம். தங்களது கஷ்டங்களை சற்று விலகி நின்று பார்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு வகையில் இந்த படங்கள் உதவுகின்றன. மேலும் அதிகபட்சம் அடுத்த ஒரு வாரத்திற்கான நம்பிக்கைகளை எடுத்துக்கொண்டு தங்களது வாழ்க்கை ஓட்டத்திற்குத் திரும்ப அவர்களால் முடிகிறது. மாயாண்டி குடும்பத்தார் இந்த வரிசையில் வரக்கூடிய ஒரு படம். ஒரு குடும்பத்தின் கதையை எந்தவித பூச்சும் இல்லாமல் மிக எளிமையாக சொன்ன திரைப்படம்.
இந்தப் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருக்கலாம், பெரிய நடிகர்கள் இதில் நடிக்காமல் இருக்கலாம். நடிகர்களின் நடிப்பு பல இடங்களில் முதிர்ச்சியற்றதாக தோன்றலாம். வசூல் ரீதியாக பெரிய சாதனைகளை செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெய்னர் எடுக்க வேண்டும் என்றால் இந்தப் படங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிச்சயம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.