Mattu Pongal 2024: கொம்புல பூவை சுத்தி! மாட்டுப் பொங்கலை சிறப்பித்த சினிமா பாடல்கள்!
Mattu Pongal 2024: தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இவை தொடர்பான பாடல்கள் பற்றி காணலாம்.
தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இவை தொடர்பான பாடல்கள் பற்றி காணலாம்.
முரட்டுக்காளை
1980 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் முரட்டுக்காளை. இந்த படத்தில் ரஜினிகாந்த், ரதி, சுமலதா, ஜெய்சங்கர், சுருளிராஜன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அறிமுக காட்சியில் ரஜினி காளையை அடக்கியவுடன் “பொதுவாக என் மனசு தங்கம்” பாடல் ஒலிக்கும். இப்பாடம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது.
சரஸ்வதி சபதம்
1966 ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா என பலரும் நடித்த படம் “சரஸ்வதி சபதம்”. கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் மாடுகளை போற்றும் வகையில் “கோமாதா எங்கள் குலமாதா” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.
அண்ணாமலை
1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ, சரத்பாபு, ராதாரவி என பலரும் நடித்த ‘அண்ணாமலை’ படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் பால்காரனாக நடித்திருப்பார். அதில் மாட்டுப் பொங்கல் அன்று “வந்தேண்டா பால்காரன்” என்ற பாடல் மூலம் சில வரிகளை மாடுகளின் பெருமையை பேசியிருப்பார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
1959 ஆம் ஆண்டு பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்த இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காளையை கொண்டாடும் வகையில் ”அஞ்சாத சிங்கம் என் காளை. இது பஞ்சா பறக்கவிடும் ஆளை” என்ற பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.
மாட்டுக்கார வேலன்
1970 ஆம் ஆண்டு பி.நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் “மாட்டுக்கார வேலன்” படம் வெளியானது. இந்த படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் “சத்தியம் நீயே தரும தாயே” பாடல் இடம் பெற்றிருக்கும். இது முழுக்க முழுக்க மாடுகளை மையப்படுத்தியே வரிகள் இடம் பெற்றிருக்கும்.
விருமாண்டி
2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி இயக்கிய விருமாண்டி படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் கமல் ஜல்லிக்கட்டு மாடு அடக்கும் வீரராக நடித்திருப்பார். அதில் “கொம்புல பூவை சுத்தி நெத்தியில பொட்டு வச்சி” பாடல் இடம் பெற்றிருக்கும்.
கொம்புவச்ச சிங்கம்டா
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்த நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார். இந்த பாடலை இயக்குநர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா எழுதியிருந்தார்.
டக்கரு டக்கரு பாடல்
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது “டக்கரு டக்கரு” பாடல். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இப்பாடல் அதன்பின்னால் இருக்கும் அரசியல், நாட்டு மாடுகள் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பற்றியும் பேசியிருக்கும்.