Varalaxmi Sarathkumar: "வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கே வில்லியாக நடிப்பேன்.." நடிகை வரலட்சுமி பேச்சு..!
வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் வெறும் 21 நாள்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் வரும் 19ம் தேதி ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. அதன் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்:
இப்படம் பற்றி இயக்குநர் தயாள் பத்மநாபன் மேடையில் பேசுகையில், “பொதுவாக ஒரு இயக்குநருக்கு ஒரு மொழியில் படம் கொடுக்கும் போது, குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதம் ப்ரேக் வேண்டும். மார்ச் 10ஆம் தேதி கொன்றால் பாவம் ரிலீஸ் ஆனது. நல்ல ஒரு திட்டமிடல் இருந்தது. குரங்கு பொம்மை போன்ற படத்தை ரீமேக் செய்ய யாருக்கும் தைரியம் வராது. ஆனால் நான் செய்தேன்.
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் கதை கொரோனா காலத்தில் எழுதியது. வேறு மாதிரியான திரைக்கதை. கண்டிப்பாக நீங்கள் பாராட்டுவீர்கள். ரொம்ப நாள் ஷூட்டிங் போன படம் இது. 21 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் கொன்றால் பாவம் 14 நாட்களில் எடுத்தேன். இரண்டு பாடல்கள் மட்டுமே என்பதால் நானே பாடல்கள் எழுதிவிட்டேன்.
ஆரவ்வுடன் கூத்து:
இடைவேளையில் இருந்து ஆரவ் என்ட்ரி இருக்கும். சந்தோஷின் வளர்ச்சிக்கு இந்தக் கதாபாத்திரத்தை யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சந்தோஷ் பிரதாப் நடித்தார். முழு படத்தையும் பெங்களூரூவில் படமாக்கினோம். அனைவருக்கும் நன்றி” எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியதாவது: ”இந்தப் படத்தில் கண்டிப்பாக கதை இருக்கும். கதை கேட்கும்போதே த்ரில்லராக இருந்தது. படம் ரிலீஸ் ஆகப் போகிறது. ஆரவ்வும் நானும் பயங்கரமாக கூத்தடித்தோம். உடனே ஸ்கேன் செய்ய வேண்டாம். எங்கள் படத்தில் சர்ச்சை எதுவும் இல்லை. மற்ற படங்களில் எதாவது சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால் எங்கள் படத்தில் நல்ல கதை இருக்கிறது. அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
ரஜினிக்கு வில்லி:
தொடர்ந்து செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு வரலட்சுமி பதிலளித்தார். “நான் ஒரு நடிகை. எந்த மாதிரி கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லியாக, கேரக்டர் ரோல் என ஏதுவாக இருந்தாலும் என்னால் அந்த கதாப்பாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்” எனப் பேசினார்.
நடிகர் ஆரவ் மேடையில் பேசுகையில், “கலகத் தலைவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். இயக்குநர் இந்தப் படத்தை 25 நாட்களில் முடிப்போம் என்றார், ஆனால் 21 நாட்களிலேயே முடித்தார். மிக சர்ப்ரைஸாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியம். ஒரு கதை கூறி அதே மாதிரி எடுப்பது பெரிய விஷயம். ஆனால் இயக்குநர் கதை கூறி அதை விட பயங்கரமாக எடுத்துள்ளார்” எனப் பேசிச் சென்றார்.