Maamannan : ஏ.ஆர்.ரஹ்மான் என் அரசியலை புரிஞ்சுக்கிட்டார்.. தேதி சொல்வேன்.. மாமன்னன் அப்டேட் சொன்ன மாரி செல்வராஜ்
”ரஹ்மான் சார் போன்ற ஒருவர் என்னுடைய படத்தை, அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுவது, கூடவே பயணிப்பது இதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” - மாரி செல்வராஜ்
நடிகர் தனுஷ் ரசிகர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது மாமன்னன் படம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
இந்த வாரம் மாமன்னன் அப்டேட்
”மாமன்னன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. சீக்கிரமாக, அதுவும் இந்த வாரத்தில் ரிலீஸ் டேட் அறிவிப்பார்கள், தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். என்னுடைய கரியரில் நல்ல நடிகர்கள் கிடைத்த பிரம்மாண்டமான படமாக இருக்கும். முக்கியமாக இன்றைய நடப்பு அரசியலை பேசும் படமாக இருக்கும். இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என நான் ஆசைப்பட்ட படமாக மாமன்னன் இருக்கும்” என்றார்.
வேறு மாதிரியான வடிவேலு
தொடர்ந்து மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “வழக்கமாக பார்க்கும் வடிவேலு இந்தப் படத்தில் இருக்க மாட்டார். வேறு ஒரு தளத்தில் வடிவேலுவைக் காண்பிக்க இந்தப் படத்தில் முயற்சி செய்துள்ளோம். தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும். வடிவேலு எவ்வளவு பெரிய லெஜண்ட் என்பது படம் பார்க்கும்போது தெரியும்” என பதிலளித்தார்.
மாமன்னன் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், ”அது பற்றி தெரியவில்லை. நானே அதற்காக காத்திருக்கிறேன். பரியேறும் பெருமாள், கர்ணன் எல்லாமே எனக்கு மிகவும் வலிதரக்கூடிய படங்கள். அது என்ன மாதிரி கனெக்ட் ஆகும் என்பது குறித்து தெரிந்து வைத்திருந்தேன். மாமன்னன் படம் குறித்து எனக்கே கேள்வி உள்ளது. அந்தக் கேள்வியை ரசிகர்கள் என்னவாக பெற்றுக் கொள்வார்கள் என்பது குறித்து படம் வந்த பிறகு தான் தெரியும்” எனப் பேசினார்.
’ஏ.ஆர்.ரஹ்மான் என் அரசியலை புரிந்து கொண்டார்’
ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசிய மாரி செல்வராஜ், ”எல்லா இயக்குநர்களுக்கும் ரஹ்மான் சாருடன் வேலை செய்யவேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அது இந்தப் படத்தில் எனக்கு அமைந்துள்ளது.
ரஹ்மான் சார் போன்ற ஒருவர் என்னுடைய படத்தை, அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுவது, கூடவே பயணிப்பது இதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் பயந்து கொண்டு இருந்தேன், இதையெல்லாம் அவர் எப்படி புரிந்துகொள்வார் என்று..ஆனால் ரொம்பவே நட்புடன் இதை எல்லாம் புரிந்து கொண்டு பணியாற்றி வருகிறார். தொடர்ந்து அவருடன் பயணிக்க வேண்டும்.
ஃபஹத் ஃபாசில், வடிவேலு சார், உதயநிதி சார், கீர்த்தி சுரேஷ் இவர்கள் எல்லாருமே வேறு வேறு ஜானரில் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். அது படம் பார்க்கும்போது நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல்
”உதயநிதி ஸ்டாலின் முழுக்க முழுக்க அரசியலில் இறங்கியுள்ளார். மாமன்னன் படம் உதயநிதிக்கு எந்த அளவு அரசியலில் பயனுள்ளதாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், ”நானும் உதயநிதி சாரும் இணைந்துள்ளோம். அவர் அரசியலில் பெரிய இடத்தில் உள்ளார். எனக்கும் ஒரு அரசியல் நிலைபாடு உள்ளது. இருவரும் சேர்ந்து இன்றைய தமிழ் சமூகத்துக்கு ஏற்ப என்ன மாதிரியாக பயணிக்க வேண்டும் என்ற ஒன்று உள்ளது. இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தை முயற்சித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.