Mansoor Ali Khan: ‘சரக்கு’ படப்பிடிப்பில் ‘அயோத்தி’ இயக்குனருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்த மன்சூர் அலிகான்!
Mansoor Ali Khan: பிரபல நடிகர் மன்சூர் அலிகான், சசிகுமாரின் நடிப்பில் வெளியாகியிருந்த அயோத்தி படத்தின் இயக்குனரை தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.
மதத்தைத் தாண்டி மனிதத்தை போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட படம், அயோத்தி. இப்படத்தில், நடிகரும் இயக்குனருமாகிய சசிகுமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அயோத்தி படத்தினை மந்திரமூர்த்தி என்ற இயக்குனர் டைரக்டு செய்திருந்தார்.
தங்க செயினை பரிசளித்த சசிகுமார்:
அயோத்தி படம், கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியானது பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை என்றாலும், படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையே பெற்றது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அயோத்தி படத்தின் 3ஆவது வார வெற்றிக் கொண்டாட்ட விழா படக்குழு சார்பில் நடைபெற்றது. அதில், இயக்குனர் மந்திர மூர்த்தி, நடிகர்கள் சசிகுமார், நடிகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலமான புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் மந்திர மூர்த்திக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரக்கும் நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்தார். திரையரங்குகளில் சில வாரங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த அயோத்தி , ஜீ 5 தளத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதியன்று வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, இப்படத்தினை பல பேர் பார்த்து விட்டு பாசிடிவான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
மன்சூர் அலிகான் பாராட்டு!
பிரபல நடிகர் மன்சூர் அலிகான், தானே தயாரித்து கதாநாயகனாக நடித்து வரும் படம், சரக்கு. படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த மன்சூர், அதற்கிடையே இயக்குனர் மந்திர மூர்த்தியை அழைத்து அயோத்தி படத்தினை எடுத்ததற்காக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், “சரக்கு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், சற்று தாமதமாக அயோத்தி படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். உலகமே கொண்டாடப் படவேண்டிய படம் அயோத்தி” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திறமை வாய்ந்த நடிகரான சசிகுமாரை வைத்து, மூர்த்தி அயோத்தி படத்தினை இயக்கியிருந்தார். தமிழ் நாட்டினர், தமிழர்கள் எவ்வளவு மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை நெஞ்சை தொடும் வகையில், இயக்குனர் மூர்த்தி இப்படம் மூலம் காண்பித்திருக்கிறார்” என்று கூறினார்.
மேலும், அயோத்தி இயக்குனர் மூர்த்தியை, தங்களின் சரக்கு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, நடிகர் நடிகைகள், 'சரக்கு' பட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து பாராட்டு தெரிவித்ததாகவும் தொடர்ந்து மக்கள் கொண்டாடும் வகையில், நல்ல கருத்தாழம் மிக்க படங்கள் எடுப்பதற்கு, படக் குழுவினரோடு வாழ்த்தியதாகவும் மன்சூர் அலிகான் கூறினார்.
அயோத்தி படம் வெவ்வேறு மொழிகளில் ரீ-மேக்?
முன்னரெல்லாம் காதல்-காமெடி-ஆக்ஷன் படங்களை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருந்த பாலிவுட் திரையுலகம், இப்போது நல்ல கதைகளையும் திரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளது. தமிழில் வெளியான கைதி படம், போலா என்ற பெயரில் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டு சமீபத்தில்தான் வெளியானது. இப்படத்தினை, நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருந்தார். படமும், ரிலீஸிற்கு பிறகு மக்களிடையே நல்ல வரவேறப்பினை பெற்றுவருகிறது.
இதையடுத்து, அயோத்தி படத்தையும் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் “அயோத்தி யா” என பெயரிடப்பட்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.