Manisha Koirala: கொஞ்ச காலம் தொலைஞ்சு போகணும்.. கம்பேக் பாராட்டுகளுக்கிடையே மனிஷா கொய்ராலா வேதனை!
Manisha Koirala: “எங்காவது சென்று என்னுடைய உடல்நலம் மீது கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறன். அதற்காக எந்த வெல்னஸ் ரிட்ரீட்டுக்கு செல்லலாம் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்” - மனிஷா
90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் தொடங்கி கோலிவுட், டோலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா (Manisha Koirala). தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பம்பாய்' படம் மூலம் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மாப்பிள்ளை என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த மனிஷா கொய்ராலா தொடர் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி தற்போது மீண்டும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ஹீராமண்டி: ‘தி டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் அவருடைய நடிப்பு பாராட்டுகளைக் குவித்தது. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அனுபவம் குறித்தும், அவர் சோர்வாக உணர்வதாகவும் ஒரு பிரேக் தேவைப்படுவதை பற்றியும் பேசி இருந்தார்.
“சஞ்சய் லீலா பன்சாலியின் 'ஹீராமண்டி: ‘தி டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸ்' படத்தில் நடித்தது அதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டது அனைத்தும் என்னை மிகவும் சோர்வடையச் செய்துள்ளது. அதனால் சில நாட்கள் பிரேக் எடுத்து கொள்ளலாம் என நினைக்கிறன். எங்காவது சென்று என்னுடைய உடல்நலம் மீது கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறன். அதற்காக எந்த வெல்னஸ் ரிட்ரீட்டுக்கு செல்லலாம் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஆரோக்கியமான உணவு, ஜிம், பிராணாயாமம், இயற்கை மருத்துவம், நடைபயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஹீராமண்டி சீரிஸிலேயே பிஸியாக இருந்துவிட்டேன். அதில் இருந்து என்னுடைய வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இறுதியாக அதை ஸ்ட்ரீமிங் செய்வதில் அதிகமாக ஈடுபட்டோம். மன அழுத்ததில் இருந்து விடுபட்டு சிறுது காலம் அனைத்தையும் மறந்து ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஹீராமண்டி மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். நான் அனைவரையும் நேசித்தேன். இதற்கு முன்னர் நான் பார்த்திராத பழகாத ரிச்சா, ஷர்மின், சஞ்சீதா என அனைவருடனும் நல்ல ஒரு பாண்ட் ஏற்பட்டது. அதிதி ராவ் ஹைதாரியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஃபர்தீன் கான் எப்போதுமே நல்ல பையன்.
நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தோம். ஆனால் வேலை சமயத்தில் அவரவரின் காட்சிகளில் முழுமையான கவனத்தை செலுத்தினோம். என்னைப் போலவே என்னுடைய சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. நாங்கள் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனித்தனியாக பயணித்தோம்” என தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.