Ponniyin Selvan 2: நாவலில் இல்லாதது படத்தில் இருக்கு..பொன்னியின் செல்வன் குறித்து இயக்குநர் மணிரத்னம்
நாவலில் இல்லாத விஷயங்களை திரைப்படத்தில் சேர்க்க வேண்டியிருந்தது ஏன் என்பது குறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மணிரத்னம் பேசியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நாவலில் இல்லாத விஷயங்களை சேர்க்க வேண்டியிருந்தது என்றும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு வந்த ரெஸ்பான்ஸ் போதுமானது எனவும் இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது.
பட வெளியீட்டை ஒட்டி இந்தியா முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் படக்குழுவினர் முழுவீச்சில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் பாகத்தில் நாவல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சில கதாபாத்திரங்கள் இல்லாமல் இருந்ததும், நாவலில் இல்லாத சில காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்ததும் பேசுபொருளானது.
இந்நிலையில் நாவலில் இல்லாத விஷயங்களை திரைப்படத்தில் சேர்க்க வேண்டியிருந்தது ஏன் என்பது குறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மணிரத்னம் பேசியுள்ளார்.
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் நிறைய கதாபாத்திரங்களையும் கொண்ட கதை. சினிமா நாவல் போன்றது அல்ல, வேறு மீடியா. சினிமாவுக்கு கதை எழுதும்போது பிரச்னைகள் வரும். சினிமாவில் பேசியே கதை சொல்ல முடியாது. மக்கள் தங்கள் கண்களால் பார்க்க வேண்டும்.
நாவலின் முடிவை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் சினிமாவில் முடிவு என்பது வேறு. க்ளைமேக்ஸ் உச்சத்தில் வந்து நிற்க வேண்டும், பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கதை கோர்வையாக வரும்பொழுது நாவலில் இல்லாத விஷயங்களை படத்துக்காக சேர்க்க வேண்டி இருந்தது.
பொன்னியின் செல்வன் போலியான கதையோ, ஃபேண்டஸி கதையோ, சூப்பர் ஹீரோ படமோ அல்ல. நடந்திருக்கும் சம்பவங்கள் பார்வையாளர்களிடம் சென்று சேர வேண்டும். அந்த வகையில் எனக்கு படத்துக்கு வந்த ரெஸ்பான்ஸ் போதுமானதாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்தபோது அதனை பாகுபலி படங்களுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சரத்குமார், ரகுமான், பார்த்திபன், ஷோபிதா, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், கிஷோர் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக இன்று படக்குழுவினர் கொச்சி சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: Maamannan : ஏ.ஆர்.ரஹ்மான் என் அரசியலை புரிஞ்சுக்கிட்டார்.. தேதி சொல்வேன்.. மாமன்னன் அப்டேட் சொன்ன மாரி செல்வராஜ்