Maamannan Success Meet: வடிவேலுவின் ஃப்ளாஷ் பேக் இப்படி உருவாச்சு... ரத்னவேலு கெட்டவன் இல்ல.. உதயநிதி பகிர்ந்த சீக்ரெட்!
“ரத்னவேல் கதாபாத்திரம் நாம் நினைக்கற மாரி கெட்டவன்லாம் கிடையாது. கொஞ்சம் மனசு பாதிக்கப்பட்டிருக்கிறான், ஒரு சின்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தா போதும்னுசொன்னேன்” - உதயநிதி
மாமன்னன் படத்தின் வெற்றி விழாவில் படத்தின் ஹீரோவும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்படம் 9 நாள்களில் சுமார் 52 கோடிகளை வசூலித்துள்ளதாக விழாவில் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இப்படத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்ற வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோரது கதாபாத்திரங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
’ரத்னவேல் கெட்டவன் இல்ல...’
“நவீனா (ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்தவர்) ஊரில் இருக்கும் எல்லா ஹீரோயினுக்கும் குரல் கொடுப்பார். அவர கூப்பிட்டு ஒரு டயலாக்கும் கொடுக்காமல் நடிக்க வைத்தார் மாரி செல்வராஜ். நான் படம் பார்த்துவிட்டு இரண்டு நாள் கழிச்சு தான் மாரி செல்வராஜிடம் சொன்னேன்.
“ரத்னவேல் கதாபாத்திரம் நாம் நினைக்கற மாரி கெட்டவன்லாம் கிடையாது. கொஞ்சம் மனசு பாதிக்கப்பட்டிருக்கிறான், ஒரு சின்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தா போதும்” என்று சொன்னேன். அவர் என்ன பண்ணனும்னு உடனே கேட்டார்.
நான் அதற்கு “யோசிச்சு பாருங்க சார். வீட்டில் அவர் மனைவியாலும் வாய் பேச முடியலை, அவர் அம்மாவாலும் பேச முடியல. வீட்டில் யார்கிட்டயும் அவனால் பேச முடியல. வீட்டில் இருக்கும் வெறிய தான் அவன் இங்க வந்து காமிக்கிறான்” அப்படினு சொன்னேன்” என்று கலகலப்பாகப் பேசினார்.
வடிவேலு ஃப்ளாஷ்பேக் காட்சி
தொடர்ந்து, “இந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சு முதல் எட்டு நாள் மாரி செல்வராஜ் என்ன எடுக்கறாருனு எனக்கும் தெரியல, அவருக்கும் தெரியல... நான் இந்தப் படமே பண்ணக்கூடாதுனு நினைச்சேன்னு மாரி ஏற்கெனவே சொல்லி இருக்காரு.
நான் ஊருக்கு வந்ததுக்கு அப்பறம் ஒரு 15 நாள் வடிவேலு சாரை வைச்சு ஷூட் பண்ணி மாரி செல்வராஜ் காண்பித்தார். அதப் பார்த்ததும் நாங்க நம்பினோம். அந்தக் காட்சி நீங்க எல்லாரும் பார்த்துப் பாராட்டிய அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி தான்.
நான் பார்க்க மாட்டேன், முழு படம் தான் பார்ப்பேன்னு சொன்னேன். ஆனால் “இது உங்க ஃப்ளாஷ்பேக், அடிவீரனுடைய ஃப்ளாஷ்பேக். இப்படி ஒரு வலி இருக்குனு நீங்க தெரிஞ்சிக்கணும், பாருங்க”னு மாரி சொன்னார்.
பாத்து முடிச்சதும், நான் வடிவேலு அண்ணனை நேரா போய் கட்டிப்பிடிச்சு “என்ன அண்ணே இப்படி பண்ணிட்டீங்க”னு சொன்னேன். வடிவேலு அண்ணன் தனியா சென்று அழும் அந்தக் காட்சியைப் பார்த்து அழாதவர்கள் இருக்க முடியாது. ஒரு புது வடிவேலு சாரை எங்க மாரி செல்வராஜ் சார் காமிச்சிருக்காரு” எனப் பாராட்டி பேசினார்.
கடந்த ஜூன். 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் தெலுங்கிலும் நாயக்குடு எனும் பெயரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.