Udhayanidhi Stalin : விடைபெறும் உதயநிதி ஸ்டாலின்... வழியனுப்ப வரும் உச்ச நட்சத்திர நடிகர்கள்.. மாமன்னன் இசை வெளியீட்டு விழா அப்டேட்!
இயக்குநர் மணிரத்னத்துக்குப் பிறகு, தற்போது உதயநிதி ஸ்டாலினுக்காக கமல் - ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாமன்னன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் பெரும் சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நட்சத்திரங்களும் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவுக்கு முழுக்கு
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி, நடிகராக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், முழுமையாக அரசியலில் பிரவேசிக்க முடிவெடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் தான், தன் இறுதிப்படம் என அறிவித்துவிட்டார்.
பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நாளை (ஜூன்.01) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நாளைய இசை வெளியீட்டு விழாவில் இந்தியாவின் முக்கிய நடிகர்களும், கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுமான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இயக்குநர் மணிரத்னத்துக்காக அவரது நாயகர்களான கமல் - ரஜினி இருவரும் இணைந்து பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நிலையில், தற்போது இருவரும் உதயநிதி ஸ்டாலினுக்காக இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் மாமன்னன் படத்தை, பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்குகிறார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று காலை மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் உடன் குடை பிடித்தபடி நிற்கும் போஸ்டர் இணையத்தில் வெளியானது.
முன்னதாக வடிவேலு பாடிய ராசாக்கண்ணு பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ஜிகு ஜிகு ரெயில் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சென்ற ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நிறைவுற்றது. வரும் ஜூன் 29ஆம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்திலும், உதயநிதி ஸ்டாலின் ராசாக்கண்ணு கதாபாத்திரத்திலும், ஃபஹத் ஃபாசில் பெருமாள் வைகுண்டம் எனும் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் சம்பா எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: AL PACINO: 29 வயது காதலி கர்ப்பம்.. 4வது குழந்தைக்கு அப்பாவாகும் 83 வயது ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் கடும் விமர்சனம்