Maamannan Making Video: வடிவேலு குரலில் ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா’... அசத்தலான ‘மாமன்னன்’ மேக்கிங் வீடியோ!
மாமன்னன் படம் நாளை வெளியாகும் நிலையில், அப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகர் வடிவேலு கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடலைப் பாட அதன் பின்னணியில் மாமன்னன் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. மாமன்னன் படம் நாளை வெளியாகும் நிலையில், கோலிவுட் வட்டாரத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படம் பேசுபொருளாகியுள்ளது.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...
இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில் மாமன்னன் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஷூட்டிங் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் பங்கேற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாடல்கள் முதல் ட்ரெய்லர் வரை அனைத்து வீடியோக்களும் மாரி செல்வராஜின் கவிதைகள் உடன் தொடங்கிய நிலையில், இந்த மேக்கிங் வீடியோவிலும் அவரது கவிதை இடம்பெற்றுள்ளது.
“நம்பிக்கை கொள், எனது விழிகளில் இப்போது உனது அகல்விளக்கின் வெளிச்சத்தைத் தவிர வேறொன்றுமில்லை” எனும் கவிதை இந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் வடிவேலுவின் கிராமிய கணீர் குரலில் ஆலய மணி படத்தில் இடம்பெற்ற “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” எனும் பழைய தமிழ் சினிமா பாடல் முழுவதும் இடம்பெற்றுள்ளது கவனமீர்த்துள்ளது.
பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
இந்நிலையில் இந்த வீடியோவை ரெட் ஜெயிண்ட் நிறுவனம், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என பலரும் இவ்விழாவுக்கு படையெடுத்து வந்து சிறப்பித்தனர்.
குறிப்பாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இது தன் கடைசி படம் என அறிவித்துவிட்ட நிலையில், இப்படத்தினை வாழ்த்த திரைத்துறையினர் பலரும் வருகை தந்தனர்.
தேவர் மகன் Vs மாமன்னன் சர்ச்சை
மேலும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் மீதான தன் விமர்சனங்களை நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் முன்வைத்தது கலவையான விமர்சனங்களைப் பெற்றது இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில் சாதீய ஒடுமுறைகளை எதிர்த்து மாரி செல்வராஜ் எடுத்த முந்தைய இரண்டு படங்களைப் போலவே இப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லரும் அதனை விளக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி தவிர்த்து டைட்டில் ரோலில் சீரியஸ் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளது மேலும் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.
இச்சூழலில் முன்னதாக மாமன்னன் படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் தனுஷ், மாரி செல்வராஜைப் புகழ்ந்தும், படக்குழுவினரைப் பாராட்டியும் ட்வீட் செய்துள்ளது கவனமீர்த்துள்ளது.