Benz: இன்ப அதிர்ச்சி! LCU-வில் ராகவா லாரன்ஸ்! ரோலக்ஸிற்கே டஃப் கொடுப்பாரா பென்ஸ்?
லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் போஸ்டர், கிளிம்பஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவரது லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்-க்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ராகவா லாரன்ஸின் பென்ஸ்:
எல்.சி.யூ. யுனிவர்சில் வரும் விக்ரம், லியோ, ரோலக்ஸ், டில்லி, அமர் கதாபாத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவர உள்ளது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.
பென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கதாபாத்திரத்தின் பெயரிலே படம் உருவாகிறது. இதற்கான டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதையில் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.
இந்த படத்திற்கான அறிவிப்பு க்ளிம்ப்ஸ் நேற்று வெளியானது. அதில் லோகேஷ் கனகராஜ் வெல்கம் டூ மை யுனிவர்ஸ் மாஸ்டர் என்று கூறுகிறார். பின்னர், கைதி, விக்ரம் படங்களில் இடம்பெறும் போதைப்பொருட்கள் காட்சியின் அனிமேஷன் காட்சிகளுடன் இடம்பெறுகிறது. பின்னர் ராகவா லாரன்ஸ் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியுடன் ரத்தக்கறையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெறுகிறது. பின்னர், மீண்டும் தோன்றும் லோகேஷ் கனகராஜ் ஆரம்பிக்கலாமா? வெல்கம் டூ நியூ வேர்ல்ட். நியூ ரூல்ஸ் என்று கூறுகிறார்.
ரோலக்ஸிக்கு நிகரான வில்லன்:
இது லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கதாநாயகன், நடிப்பு என இரு விதங்களிலும் அசத்தலாக நடிக்கக்கூடிய ராகவா லாரன்ஸ் இந்த பென்ஸ் கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையான கதாபாத்திரமாக இந்த பென்ஸ் கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படம் எல்.சி.யூ. வரிசையில் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த படத்தில் தன்னுடைய எல்.சி.யூ. கதாபாத்திரங்கள் அனைத்தும் இடம்பெறும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், விரைவில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை குறிப்பிடும் வகையில் சமீபத்தில் டில்லி விரைவில் வருகிறான் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வில்லன் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் உருவாக்கி வருகிறார். மேலும், சூர்யாவை தனியாக வைத்து ரோலக்ஸ் என்ற படத்தையும் அவர் உருவாக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.