LCU : விக்ரம் 2 தான் கடைசி படம்...எல்.சி.யு மொத்த ஸ்கெட்ச் இதுதான்..லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்
கமலின் விக்ரம் 2 திரைப்படம் தான் எல்.சி.யுவில் கடைசி படமாக இருக்கும் என்றும் அதற்கு முன்பாக தான் எடுக்கவிருக்கும் படங்கள் பற்றியும் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்டார்
எல்.சி.யு
மாநாகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனக்கேன் ஒரு தனி கதை சாம்ராஜியத்தையே உருவாக்கியிருக்கிறார். தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோக்கி. இப்படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி 2 படத்தை அவர் இயக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் நடித்த அத்தனை நடிகர்களையும் வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி கார்த்தி , கமல் , சூர்யா , ஃபகத் ஃபாசில் , விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவரும் கைதி 2 படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். எல்.சி.யு வை பற்றிய ஒரு சிறு அறிமுகமளிக்கும் வகையில் குறும்படம் ஒன்றையும் லோகேஷ் இயக்கியுள்ளார். இந்த குறும்பட விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எல்.சி.யு பற்றி விளக்கமாக லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
எல்.சி.யு பற்றி லோகேஷ் கனகராஜ்
" நான் ஒரு கட்டத்தில் ரொம்ப தீவிரமாக மார்வெல் படங்களை பார்த்தவன். பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லை. என்னுடைய எல்லா நேரத்தையும் படம் பார்க்க மட்டுமே செலவிட்டிருக்கிறேன்.அதனால் தான் என்னால் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் சொந்தமாக படம் எடுக்க முடிந்தது. மார்வெல் மாதிரி நிறைய நடிகர்களை வைத்து இங்கே யாராவது ஒரு படம் எடுத்துவிட மாட்டார்களா என்று நான் காத்திருந்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் எல்.சி.யு என்கிற ஒன்றை உருவாக்கினேன். இந்த ஐடியாவை நான் சொன்னபோது நான் வேலை செய்த எல்லா நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதனால் சும்ம பேருக்கு இப்படி ஒன்றை தொடங்கினோம் என்று இல்லாமல் நான் அதனை முடிக்க வேண்டும். என்னை ஆதரித்த அனைவருக்கு அதுதான் நான் திருப்பி கொடுக்க முடிந்தது. " என லோகேஷ் எல்.சி.யு பற்றி பேசினார்.
விக்ரம் 2 தான் கடைசி படம்
' கைதி 2 படத்திற்கான திரைக்கதையை நான் மொத்தமாக எழுதி முடித்துவிட்டேன். கூலி படம் முடித்ததும் உடனடியாக கைதி 2 படத்தை தொடங்க இருக்கிறேன். அடுத்தபடியாக சூர்யாவுடன் ரோலக்ஸ் ஒரு தனிப்படமாக இருக்கும். பின் கடைசியாக விக்ரம் 2 படத்துடன் எல்.சி.யு முடிவுக்கு வரும். விஜய் அண்ணா மட்டும் ரிடையர்மெண்ட் அறிவிக்காமல் இருந்திருந்தால் லியோ 2 தான் எல்.சி.யு வின் கடைசி படமாக இருந்திருக்கும். இந்த படங்களை இயக்குவதற்கு நடுவில் எனக்கு இடைவெளி இருந்தால் கூலி மாதிரியான தனி படங்களை இயக்குவேன்." என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.