Leo Actors Salary: விஜய் முதல் மன்சூர் அலிகான் வரை.. லியோ பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Leo Actors Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தின் நடிகர்களின் சம்பளம் பற்றிய விரிவான தகவவலைத் தெரிந்து கொள்ளுங்கள்!
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ (Leo Film) திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
லியோ பட்ஜட்
லியோ திரைப்படம் கிட்டதட்ட ரூ.300 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல்வேறு திரைப்பிரபலங்கள் இணைந்துள்ளார்கள். நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில், உச்சக்கட்ட லியோ ஃபீவர் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பளம் தொடர்பான தகவல்கள் இணையதளத்திலும் கோலிவுட் வட்டாரங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதன்படி லியோ குழுவினரின் சம்பள விவரங்களைப் பார்க்கலாம்!
விஜய்
லியோ படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் இந்தப் படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தான் நடித்த எந்தப் படத்திற்கும் இல்லாத உழைப்பை இந்தப் படத்திற்காக விஜய் செலுத்தியுள்ளதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் விஜய் தானே செய்துள்ளார் என்று லோகேஷ் தெரிவித்தார். இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் மொத்தம் ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் பெற்றதாகவும் தற்போது அதனைக் கடந்து தனது மார்கெட்டை விஜய் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்ததாக அதிக சம்பளம் பெறும் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத் தக்கது.
த்ரிஷா
கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் இளமை மாறாமல் எல்லா காலத்தில் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகையாக நடிகை த்ரிஷா இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக தனது கரியரில் பெயர் சொல்லும் இன்னொரு கதாபாத்திரத்தையும் இணைத்துள்ளார் த்ரிஷா.
இந்நிலையில், லியோ படத்திற்காக த்ரிஷா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர்களில் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சம்பளம் குறைவு என்றாலும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் த்ரிஷா!
சஞ்சய் தத்
லியோ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அடி எடுத்து வைக்கிறார் நடிகர் சஞ்சய் தத். பாலிவுட்டில் கிட்டத்தட்ட 270 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சஞ்சய் தத் இந்தப் படத்தில் அந்தோனி தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத், தென் இந்திய நடிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தற்போது லியோ படத்திற்காக ரூ.8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
பிரியா ஆனந்த்
தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை பிரியா ஆனந்த். நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பெரிய படத்தில் வருகை தர இருக்கிறார். லியோ படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக ரூ.50 லட்சம் சம்பளமாக பிரியா ஆனந்த் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அர்ஜூன் சார்ஜா
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று பட்டம் பெற்றவர் நடிகர் அர்ஜூன். லியோ திரைப்படத்தில் ஹெரால்டு தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம் நடிகர் அர்ஜூன்.
கெளதம் மேனன்
இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இவர்களின் ரூ.30 முதல் 70 லட்சங்கள் வரை தோராயமாக வேறுபடலாம்.