தியேட்டருக்கு எவன் போவான்...’ ஆய்வில் 67 சதவீதம் பேர் சொன்ன கருத்து!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் எண்ணமே இல்லை என்று 67 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு கடந்தாண்டு முதன்முதலாக பிறப்பிக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால், நாடு முழுவதும் திரைப்படத் தொழில் கடுமையாக முடங்கியது. பின்னர், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்த பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது.
இயல்புநிலை திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மே மாதம் முதல் பல்வேறு மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் மீண்டும் திரைப்படத் தொழில் முடங்கியது. இந்த நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை பரவல் ஓரளவு குறைந்த நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், ராஜாஸ்தான், தெலங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஆந்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாநிலங்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்க பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு திரையரங்குகள் திறக்கப்பட்டால் திரையரங்குகளுக்கு செல்வீர்களா என்று நாட்டு மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 301 மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரத்து 711 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது, அடுத்த 60 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் திரையரங்குகளுக்கு செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அவர்களில் 8 சதவீதம் நபர்கள் திரையரங்குகளுக்கு பல முறை செல்வோம் என்று கூறினார்கள். 2 சதவீதம் பேர் ஒருமுறை மட்டுமே திரையரங்கம் செல்வோம் என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வின்போது, 67 சதவீத மக்கள் அடுத்த 60 நாட்களுக்கு திரையரங்குகளுக்கு செல்லும் திட்டம் எதுவுமே இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் மக்கள் திரையரங்குகளிலோ மற்றும் வணிக வளாகங்களிலோ படம் பார்ப்பதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 4 சதவீத மக்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 10 சதவீத மக்கள் மட்டுமே திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்வோம் என்று கூறியுள்ளனர்.
ஆய்வு நடத்தப்பட்ட 10 ஆயிரத்து 711 நபர்களில் 37 சதவீதம் பெண்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. 63 சதவீதம் ஆண்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.
லோக்கல் சர்க்கிள் அமைப்பு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில, 8 சதவீதம் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதாக கருத்து தெரிவித்தனர். இந்தமுறை மேற்கொண்ட ஆய்வில் அது சற்று அதிகரித்து 10 சதவீதம் மக்கள் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்கள் பார்க்கத் தயாராக உள்ளதாக கூறியுள்ளனர்.
மாநிலங்கள் திரையரங்குகள் திறப்பின்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு கட்டாயம் அனுமதி அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஓடிடி மீதான மோகம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.