Parvathy | தனக்கென தனி ரசிகர் கூட்டம்... ரீலோ.. ரியலோ.. மாஸ் காட்டும் பார்வதி!
பூ படத்தில் இவர்தான் நாயகியா என்று கூட சிலர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அதுதான் பார்வதியின் வெற்றியும் கூட. இன்று பார்வதி இந்திய அளவில் பரிச்சயமான பெயர். பரிச்சயமான நடிகர். பரிச்சயமான நபர்.
பூ படத்தில் வரும் ஆவாரம் பூ அந்நாளில் இருந்து யாருக்கு காத்திருக்கு என்ற பாடலில் ஒல்லிக்குச்சி பெண்ணாய் கிராமத்தை முகத்தில் சுமந்து சுற்றிக்கொண்டிருப்பார் பார்வதி. இன்றும் சில கிராமங்களுக்குச் சென்று கை நீட்டி ஒரு பெண்ணை அடையாளம் காண்பித்தால் அந்த முகத்தில் பூ பார்வதியை நிச்சயம் காணலாம். இதுதான் நாயகியா என்று கூட சிலர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அதுதான் பார்வதியின் வெற்றியும் கூட. இன்று பார்வதி இந்திய அளவில் பரிச்சயமான பெயர். பரிச்சயமான நடிகர். பரிச்சயமான நபர்.
எத்தனை நீள பயணமாக இருந்தாலும் அது முதல் அடியில்தானே தொடங்கப்பட வேண்டும். பார்வதி எடுத்து வைத்த முதல் அடி 2006-ஆம் ஆண்டில் மலையாளத்தில். அவுட் ஆஃப் சிலபஸ் படம் மூலம் மலையாளக் கடலில் உருவானது பார்வதி எனும் சிறு சுழல். அது இன்று அதி தீவிர புயல். சமீப ஆண்டுகால மலையாள சினிமாவை பார்வதியை தவிர்த்து யாராலும் எழுத முடியாது. வெறுமனே கவர்ச்சிக்கும், பாடலுக்கும் தான் நாயகி என்ற கதையெல்லாம் மலையாளத்தில் இல்லை. அதனை இறுகப்பற்றிக்கொண்ட ஒரு நடிகர்தான் பார்வதி. பார்வதியின் படங்களில் பெரும்பான்மை படங்களை அவரே தாங்கிச் செல்வார். மலையாளத்தில் அவர் நடித்த 'டேக் ஆப்' திரைப்படத்தின் முதுகெலும்பு பார்வதிதான். ''என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் இவரின் கதாபாத்திரம் படம் பார்த்த சில நாட்களுக்கும் பாதிப்பாய் இருக்கும். பார்வதியை பெரும்பாலானவர்களுக்கு சார்லியில் தெரியும். சார்லியின் டெஸ்சாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
பெங்களூர் டேஸ், வைரஸ், உயரே, கூடே என அவர் நடித்த படங்களில் எல்லாம் மூன்று ஃபயர் விடும் அளவுக்கு நடித்த பார்வதி சமீபத்தில் வெளியான ஆர்க்கரியாம் படத்திலும் தன்னை நிலைநிறுத்தியிருப்பார். தமிழில் மரியானில் கண்களில் காதலை வழியவிடும் பார்வதி கணவனுக்காக தவிக்கும் காட்சிகள் வேற லெவல். சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன் என தமிழிலும் கவனிக்க வைத்தார். திரைப்படம், அதைச் சார்ந்த நடிகர் என பார்வதியை சிறந்த நடிகர் என்ற ஒரு வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. சினிமாவில் மட்டுமல்ல சினிமாவுக்கு வெளியேவும் பார்வதி ஃபயர் விடத்தான் செய்வார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வெளியான ஒரு திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் இருந்தன. அதே துறையைச் சேர்ந்த ஒரு முன்னணி கதாநாயகி அதை எதிர்த்து ஒரு விழா மேடையிலேயே குரல் கொடுத்தார். அவர் பார்வதி. வழக்கம் போல் நடிகரின் ரசிகர்கள் கொந்தளித்தார்கள். கேரள பெண்கள் எல்லாம் பார்வதியின் பக்கம் நின்றார்கள். ஒரு நடிகையாக இருந்துகொண்டு முன்னணி நடிகரை எதிர்த்து குரல் கொடுக்கிறாயே என்று கேட்டதற்கு, ''நான் நடிகை அதற்கு முன் ஒரு பெண்'' என சொல்லியவர் பார்வதி.
55 ஆண்டுகளுக்கு முன் ஊடக அறம் பேசிய எம்.ஜி.ஆர்.,! ஏன் உதயமானது சந்திரோதயம்?
பட வாய்ப்புக்காக கேரள சினிமாவில் பலரும் அட்ஜெஸ்ட் செய்ய சொல்கிறார்கள் என்று இந்தியாவே பார்த்துக்கொண்டு இருந்த ஒரு மேடையில் சொன்னார் பார்வதி. அதற்கு பின் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் ஒதுக்கப்பட்டதும், ''எங்கள் வீட்டில் சினிமாவை விட்டு வெளியே வரச் சொல்கிறார்கள். யோசித்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று சாதாரணமாய் சொல்லிச் சென்றார். கேரள நடிகை விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கு எதிராக விடாப்பிடியாக குரலை தொடர்ந்து பதிவு செய்தவர். பார்வதி மேனன் என்ற பெயரில் இருந்த சாதி எனக்கு வேண்டாமென்று ''நான் வெறும் பார்வதி தான். மேனன் எல்லாம் எனக்கு தேவை இல்லை'' என பளீரென உரக்கச் சொன்னவர்.
இந்திய நடிகர்கள் சிலர் வட்டமாய் அமர்ந்து கலை குறித்தும், இந்திய திரைப்படங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தபோது அர்ஜூன் ரெட்டியை கிழித்து தொங்கவிட்டார் பார்வதி. திரைப்படங்கள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டாம். கமர்ஷியல் படங்கள், கொண்டாட்டமான படங்கள் இருக்கவேண்டும். ஆனால் குறிப்பிட்ட பாலினத்தை கொச்சைப்படுத்தாமல், உங்கள் காமத்துக்கான காட்சிப்பொருளாக ஆக்காமல் இருக்க வேண்டும். கண்ணியம் வேண்டும் என்றும் அசரடித்தார்.
மலையாள நடிகர்கள் சங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டபோதும் முதல் ஆளாய் குரல் கொடுத்தவர், சினிமா சார்ந்து மட்டுமல்ல, அரசு தவறும் கணங்களிலும் அனல் கக்க மறுப்பதில்லை பார்வதி. அது மத்திய அரசோ, மாநில அரசோ நியாயத்திற்காக பார்வதியின் குரல் ஒலிக்கத் தவறுவதில்லை. பார்வதி சமீபத்தில் வீசிய வார்த்தைகள் ஓஎன்வி விருது குறித்தது. மலையாளத்தின் உயரிய விருதை பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எப்படி பரிந்துரைக்கப்பட்டது என வைரமுத்துவுக்கு எதிராக அரசை சாடினார் பாரு. இன்று விருது பரிந்துரை மீண்டும் பரிசீலனையில் இருக்கிறது.
சினிமாவோ, அரசியலோ, உள்ளூரோ, வெளியூரோ, கலையோ, கடவுளோ கண்ணுக்கு எதிரே நியாயமில்லை என எதைக்கண்டாலும் குரல் கொடுக்கும் பார்வதியின் தில்லுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. நடிகையர் திலகம், பெண்ணியவாதி, லேடி சூப்பர் ஸ்டார், புரட்சியாளர் என பார்வதியை ரசிகர்கள் அவரவர் பார்வையில் பார்த்துக்கொண்டே இருக்க மேலே மேலே பறந்துகொண்டே இருக்கிறார் நம்ம பூ நாயகி.