Parvathy Thiruvothu: ரீலிலும் நாயகி.. ரியலிலும் நாயகி..! 'பூ'வுக்கு பிறந்தநாளு..!
மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் என்றாலும் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாக அறியப்படும் பார்வதிக்கு இன்று பிறந்தநாள்.
''நாயகிகளின் கவர்ச்சி என்பது உடலைக் காட்டுவது அல்ல. அது அவர்கள் நடிப்பின் வெளிப்பாட்டில் இருக்கிறது. கதாபாத்திரத்தின் ஆட்டிடூட்தான் கவர்ச்சியை காட்டுகிறது. அப்படிபார்த்தால் மரியான் படத்தில் நான் நடித்தது கவர்ச்சியான கதாபாத்திரம். பனிமலர் கவர்ச்சியானவள்தான்'' நேர்காணல் ஒன்றில் நாயகிகளின் கவர்ச்சிக்கு இப்படி பதில் அளித்தவர் நடிகை பார்வதி.
மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் என்றாலும் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாக அறியப்படும் பார்வதிக்கு இன்று பிறந்தநாள். நாயகனுக்கு ஒரு ஜோடி, படத்துக்கு ஒரு கவர்ச்சி என்ற சராசரி நாயகிக்கான பிம்பத்தை தொடக்கத்தில் இருந்தே உடைத்தெறிந்தவர் பார்வதி. வெறும் சினிமா, சினிமா நிகழ்ச்சிகள் என்று மட்டுமே இல்லாமல் தொடர்ந்து சினிமா தொடர்பான பிரச்னைகளுக்கும், பெண்களுக்கு எதிரான சிக்கல்களுக்கும், சமூக பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு நாயகியாக இன்றும் முதல் வரிசையில் முதல் ஆளாக நிற்பவர் நம் மரியான் நாயகிதான்.
2006-ஆம் ஆண்டில் மலையாளத்தில் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார் பார்வதி. அவுட் ஆஃப் சிலபஸ் படம் மூலம் தானும் சினிமாவில் குதித்துவிட்டேன் என பயணத்தை தொடங்கிய பார்வதி இன்று மலையாளத்தின் மிக முக்கிய நடிகை. சமீப ஆண்டுகால மலையாள சினிமாவை பார்வதியை தவிர்த்து யாராலும் எழுத முடியாது. பார்வதிக்கு கதை சொல்ல வேண்டுமென்றால் அந்தக் கதையில் வழக்கத்தைவிட ஏதோ ஒன்று இருக்க வேண்டுமென்று இயக்குநர்களை யோசிக்க வைத்ததே பார்வதியின் வெற்றி.
தான் நடித்த பல படங்களில் பெரும்பான்மை படங்களை பார்வதியே தாங்கிச் செல்வார். மலையாளத்தில் அவர் நடித்த 'டேக் ஆப்' திரைப்படத்தின் முதுகெலும்பு பார்வதிதான். ''என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் இவரின் கதாபாத்திரம் படம் பார்த்த சில நாட்களுக்கும் பாதிப்பாய் இருக்கும். பார்வதியை பெரும்பாலானவர்களுக்கு சார்லியில் தெரியும். சார்லியின் டெஸ்சாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். பெங்களூர் டேஸ், வைரஸ், உயரே, கூடே, ஆர்க்கரியாம் என அவர் நடித்த படங்களில் தன்னை நிலைநிறுத்தியிருப்பார். தமிழில் மரியானில் கண்களில் காதலை வழியவிடும் பார்வதி கணவனுக்காக தவிக்கும் காட்சிகள் வேற லெவல். சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன் என தமிழிலும் கவனிக்க வைத்தார்.
நடித்தோம்.. சென்றோம்.. என்ற பாலிசியை வைத்துக்கொள்ளமால் சினிமாவைத்தாண்டியும் பல விவகாரங்களுக்கு தன்னுடைய குரலை தொடர்ந்து பதிவு செய்யும் பார்வதிக்கு சினிமாவை பாலோவே செய்யாத பலரும்கூட ரசிகர்களாக இருப்பார்கள். பட வாய்ப்புக்காக கேரள சினிமாவில் பலரும் அட்ஜெஸ்ட் செய்ய சொல்கிறார்கள் என்று இந்தியாவே பார்த்துக்கொண்டு இருந்த ஒரு மேடையில் சொன்ன பார்வதிக்கு அதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தது. துறை ரீதியாக அவர் ஒதுக்கப்பட்டார். ''எங்கள் வீட்டில் சினிமாவை விட்டு வெளியே வரச் சொல்கிறார்கள். யோசித்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு வேலையைப் பார்த்தார் பாரு.
கேரள நடிகை விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கு எதிராக விடாப்பிடியாக குரலை தொடர்ந்து பதிவு செய்தவர். பார்வதி மேனன் என்ற பெயரில் இருந்த சாதி எனக்கு வேண்டாமென்று ''நான் வெறும் பார்வதி தான். மேனன் எல்லாம் எனக்கு தேவை இல்லை'' என பளீரென உரக்கச் சொன்னவர். ஊரே கொண்டாடிய அர்ஜூன் ரெட்டியை அந்தப் படத்தின் நடிகருக்கு முன்னாடியே கிழித்து தொங்கவிட்டவர். பெண்களுக்கு எதிரான வசனங்கள் இருந்ததால் மம்முட்டியின் படத்தை அவர் முன்னே விமர்சித்து எதிர்ப்புகளை சம்பாதித்தார். ஒரு நடிகையாக இருந்துகொண்டு முன்னணி நடிகரை எதிர்த்து குரல் கொடுக்கிறாயே என்று கேட்டதற்கு, ''நான் நடிகை அதற்கு முன் ஒரு பெண்'' என தடாலடி பதிலளித்து எதிர்ப்பாளர்களை வாயடைக்கச் செய்தவர். ரீலோ ரியலோ தனக்கென தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு கவனம் ஈர்க்கும் பார்வதியை ரசிகர்கள் அவரவர்கள் பார்வையில் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்.