நடிகர் ராம் சரண் லியோ திரைப்படத்தில் இணைகிறாரா? வெளியான புதிய தகவல்
நடிகர் ராம் சரண் லியோ திரைப்படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் லியோ திரைப்படத்தில் இணைய உள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்நிலையில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் லியோ படத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் கெளரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் இது தொடர்பாக தெலுங்கு தனியார் ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், லியோ திரைப்படத்தில் ராம் சரண் இணையவில்லை என கூறப்பட்டுள்ளது. நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த வருடம் சந்தித்ததாகவும் அப்போது அவர்கள் இருவர் கூட்டணியில் படம் எடுப்பது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் ராம் சரணை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் ஆனால் தமிழில் லோகேஷ் கனகராஜுக்கு உள்ள படங்கள் நிறைவடையும் வரை தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அந்தப்படம் இந்த வருடம் உருவாக வாய்ப்பில்லை என்றும் அடுத்த வருடம் அல்லது 2025-ல் அவர்கள் கூட்டணியில் படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படி இருவேறு தகவல்கள் உலா வரும் நிலையில் லியோ படக்குழு தரப்பில் இருந்து நடிகர் ராம் சரண் படத்தில் இணைந்ததாக இது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க