Leo Vijay: என்னது.. விஜய்க்கு ஓப்பனிங் சாங் இல்லையா.. பில்ட்-அப் இல்ல.. லியோ முழுக்க முழுக்க லோகேஷ் படம்!
மாஸ்டர் திரைப்படம், பாதி விஜய் படம் - பாதி லோகேஷ் கனகராஜ் படமாக உருவாகியது என்றால் லியோ (Leo) திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக உருவாகி இருக்கிறதாம்!
வழக்கமாக விஜய் படங்களில் இருக்கும் காட்சிகள் எதுவும் லியோ திரைப்படத்தில் இருக்காது என்று லியோ (Leo) திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாக இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 19ஆம் தேதிக்கு முன்பாக 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு லியோ பிரீமியர் ஷோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லியோ திரைப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. மேலும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் உள்ளார்.
லியோ ஸ்பெஷல்
லியோ திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து வருகிறார். லியோ படத்தின் ரிலீசுக்குப் பின்னும் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். லியோ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் என்ன புதிதாக செய்திருக்கிறார் என்று பார்க்கலாம்.
இண்ட்ரோ சாங்
விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் குறிப்பாக ஓப்பனிங் சாங் வைத்து விஜய் நடனமாடுவதைப் பார்ப்பது ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான். ஆனால் லியோ படத்தில் இந்தக் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுக்கப்போவதில்லை லோகேஷ் கனகராஜ். லியோ படத்தில் தான் அறிமுக பாடலைத் தவிர்த்துவிட்டிருப்பதாக லோகி தெரிவித்துள்ளார். ஆனால் கவலை வேண்டாம் மக்களே போதும் போதும் என்கிற அளவுக்கு படத்தில் ஆக்ஷன் இருக்கிறதாம்.
பன்ச் டயலாக்!
”ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’, ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்று விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆல் டைம் ஹிட் ஆகி இருக்கின்றன. ஆனால் லியோ திரைப்படத்தில் ஒரு பன்ச் டயலாக் கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இருக்கலாம்.
இண்ட்ரோ ஃபைட்..
எப்படி படத்தில் ஓப்பனிங் பாடல் கிடையாதோ அதே மாதிரி ஓப்பனிங் சண்டைக்காட்சியும் லியோ படத்தில் கிடையாதாம். அதே போல் எந்த விதமான பில்ட் அப் ஷாட் கூட விஜய்க்கு படத்தில் கிடையாது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
டூப் இல்லை
லியோ திரைப்படத்தில் மிக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன . இந்த சண்டைக் காட்சிகள் அனைத்திலும் டூப் இல்லாமல் தானே நடித்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தம் விஜய் படங்களில் இருக்கும் வழக்கமான காட்சிகள் எதுவும் லியோ படத்தில் இருக்கப் போவதில்லை. முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக லியோ திரைப்படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.