Lokesh Kanagaraj: ரூ.1.70 கோடியில் சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ..!
லியோ படப்பிடிப்பை முடித்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பிரமாண்ட சொகுசு காரை வாங்கியுள்ளார். காருடன் லோகேஷ் கனகராஜ் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், புதிதாக ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு வெளிவந்த மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். சிறு பட்ஜெட் படமான மாநகரம், விமர்சன ரீதியாக பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இதை தொடர்ந்து 2019ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார்.
மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அசத்தி இருந்தார். மாநகரத்தை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை கொண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்ததால் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை எல்சியூ கூட்டணி என அழைக்கும் அளவுக்கு அவர் முக்கிய நபராக வலம் வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் லியோ. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கும் நிலையில், காஷ்மீர், தமிழ்நாடு, தலக்கோணம் பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி லியோ படம் வெளியாவதையொட்டி போஸ்ட் புரோடெக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு நடிகர்களின் பிறந்த நாளையொட்டி போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அர்ஜூன் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்திருக்கும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோவில் வில்லனாக வரும் அர்ஜூன் ஹரோல்ட் தாஸ் என்ற பெயரில் நடித்துள்ளார். அர்ஜூனின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவை லியோ கிளிம்ப்ஸ் நினைவுப்படுத்துவதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் லியோ படப்பிடிப்பை முடித்து கொண்ட லோகேஷ் கனகராஜ், பிஎம்டபிள்யூ 7சீரிஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். ரூ.1.70 கோடி மதிப்புள்ள இந்த சொகுசு காரை லோகேஷ் வாங்கும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. முன்னதாக விக்ரம் படத்தை முடித்ததற்காக லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் காரை கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருந்தார்.ரூ.80 லட்சம் மதிப்பிலான அந்த கார், மிகப்பெரிய சர்ப்பிரைசாக லோகேஷ் கனகராஜூக்கு இருந்தது. இந்த நிலையில் தற்போது அதை விட இரு மடங்கு விலை கொண்ட சொகுசு காரை லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ளார்.
Lokesh Kanagaraj gets a brand new BMW 7 series car priced at ₹1.70 cr [Ex Showroom] pic.twitter.com/B2g7gehRfR
— Manobala Vijayabalan (@ManobalaV) August 17, 2023