Vaali: "நான் எலும்புக்கு வாலாட்டும் நாய்.." கவிஞர் வாலி அப்படி சொன்னது ஏன்?
நான் விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய் என்று கவிஞர் வாலி கூறியது ஏன்? என்பதை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலி. அவர் மறைந்தாலும் இன்றும் அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாக உள்ளது. கவிஞர் வாலி ஒரு முறை தன்னிடம் கவிதை மேடைகளில் எழுதும் பாடல்களுக்கும், சினிமா பாடல்களுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் என்பதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வாலாட்டும் நாய்:
அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, கவியரங்க மேடை எல்லாம் தமிழை இவ்வளவு சிறப்பாக பாடுறியே. சினிமாவுல இவ்வளவு கொச்சையா பாட்டு எழுதுறியேன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் மூர்க்கத்தனமாவே அதற்கு பதில் கூறினேன்.
நான் சினிமாவுல விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய். கவியரங்கத்துல வண்ணமொழி பிள்ளைக்குத் தாலாட்டும் தாய்னு சொன்னேன். இது 10 பேர் திருப்திக்காக செய்வது. இலக்கிய ஈடுபாடு ஆத்ம திருப்தி. இலக்கிய ஈடுபாடு கண்டிப்பா வேண்டும். எல்லா திரை கலைஞர்களுக்கும் வேண்டும். எம்ஜிஆர் இருக்குறப்ப நான் ஒரு முறை சொன்னேன்.
கற்பனைத் தமிழ், விற்பனைத் தமிழ்:
அண்ணே நான் ரெண்டு தமிழ் வைத்துள்ளேன். ஒன்னு விற்பனை தமிழ், இன்னொன்னு கற்பனை தமிழ். விற்பனை தமிழ் கோடம்பாக்கத்திற்கு, கற்பனை தமிழ் கவியரங்கத்திற்கு. சின்ன வயசுல இருந்தே இலக்கிய ஈடுபாடு உண்டு. இலக்கிய ஆர்வலர்களான திருலோக சீதாராம், அகிலன் ஆகியோருடன் நான் சின்ன வயதில் நிறைய பழகியுள்ளேன்
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
காலத்தை கடந்த கவிஞர் என்று போற்றப்படும் வாலி எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என 4 தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
மேலும், எம்எஸ்விஸ்வநாதன் காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் வரை பாடல்களை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு. காலத்திற்கு ஏற்ப தனது பாடல்களையும் அப்டேட்டாக எழுதி வருகிறார்.
1931ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பிறந்த வாலி, 1959ம் ஆண்டு முதன்முதலில் அழகர்மலை கள்வன் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். சுமார் 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வாலி 2013ம் ஆண்டு காலமானார். அவரது மறைவிற்கு பிறகும் அவர் எழுதிய 11 பாடல்கள் வெளியானது.
பாடலாசிரியராக மட்டுமின்றி பொய்க்கால் குதிரி, சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், காதல் வைரஸ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் , கதை எழுதியுள்ளார்.





















