எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கிடைத்த வாய்ப்பால் தமிழ் திரையுலகம் கொண்டாடிய பாடகர் உருவானது எப்படி? என்பதை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் மறைந்த பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன். அவர் பாடகராக உருவானது எப்படி? என்பதை கீழே காணலாம்.
திடீரென வந்த வாய்ப்பு:
இதுதொடர்பாக, அவர் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, என் மகன் பிறந்தான். 16 வயதினிலே படம் தொடங்கியது. அதற்கு அருமை நண்பர் பாரதிராஜா இயக்கம். நாங்கள் எல்லாம் நெருங்கிய நண்பர்கள். அதனால், அவரது பட பூஜைக்கு எனக்கு கார்டு கொடுத்தார். பாடுவதற்கு கூப்பிடவில்லை. பூஜைக்கு வந்துடுயா, படம் பண்றேன் அப்படினு சொன்னாரு. நானும் பூஜைக்கு போயிட்டேன்.
அந்த பாட்டு நான் பாட வேண்டிய பாட்டு அல்ல. எஸ்பி பாலசுப்ரமணியம் பாட வேண்டிய பாடல். என்ன ஆகியது என்றால் எஸ்பி பாலசுப்ரமணியமும் வந்தார். அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டது. அவரால் பாட முடியவில்லை. பாட முடியாது ட்ராக் எடுத்துக்கோ, அதன்பின்பு வந்து பாடுங்க என்றார். அப்போது எல்லாம் பூஜையில் ட்ராக் எடுக்க மாட்டார்கள். நேரடியாகத்தான் பாடுவார்கள்.
இளையராஜாவின் யோசனை:
யாரை பாட வைப்பது என்று புரியாமல் நான் வந்தவுடன் இளையராஜா, வாசுவை பாட வச்சிடலாம். ட்ராக் பாடட்டும் அவன், அப்புறம் பாப்போம் என்று சொன்னார். அப்போது, இளையராஜா என்னை அழைத்து இது ட்ராக் என்று நினைத்து பாடாதே, உண்மையா நீதான் பாட்றேன் என்று நினைத்து பாடு. நல்லா இருந்தால் ஓகே ஆகிடும். உன் நேரம் அவ்ளோதான் என்றார்.

சரி என்று பாடலை கற்றுக்கொண்டு நான் பாட ஆரம்பிச்சேன். பி. சுசீலாவோட பாடனும். செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா. அந்த பாட்டுதான் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த பாடல். அந்த பாட்டிற்கு பிறகுதான் நான் நிரந்தர பின்னணி பாடகர் ஆக்கப்பட்டேன்.
நேரம்:
ஓய்வே இல்லாமல் பாட்றேன். வரிசையாக கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிவப்பு ரோஜாக்கள் என்று அனைத்து பூஜை பாடல்களும் நான்தான் பாடுகிறேன். ஒரு மனிதனுக்கு நேரம் வரும் வரைதான் கஷ்டம். நேரம் வந்துவிட்டால் அவனுக்கு சாப்பிட கூட நேரம் இருக்காது. அந்தளவு அவன் பிசியாகிவிடுவான்.
இவ்வாறு அவர் உருக்கமாக பேசியிருப்பார்.
பிரபல பாடல்கள்:
செவ்வந்தி பூ முடிச்ச, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, கோவில் மணி ஓசை தன்னை, அள்ளித்தந்த பூமி, பொதுவாக என் மனசு தங்கம், கோடை கால காற்றே, ஆசை நூறுவகை, ஒரு கூட்டுக்குயிலாக, ஆகாய கங்கை, வெத்தலயே போட்டேன்டி, பேர் வச்சாலும் வக்காம, வெட்டி வேரு வாசம், அடி ஆத்தாடி , என்னமா கண்ணு என தமிழ் திரையுலகின் எவர்கிரீன் பாடல்களை பாடிய பெருமை மலேசியா வாசுதேவனுக்கு உண்டு.
நடிகர்:
பிரபல பாடகராக மட்டுமில்லாமல் பிரபல நடிகராகவும் உலா வந்தார். 1977ம் ஆண்டு முதல் நடிகராகவும் உலா வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும், பாடகராகவும் உலா வந்த மலேசியா வாசுதேவன் 2011ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சென்னையில் காலமானார். இவர் 1944ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி மலேசியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















