Thillana Mohanambal:‘கலையோடு இணைந்த காதல்’ .. போட்டி போட்டு நடித்த சிவாஜி - பத்மினி..தில்லானா மோகனாம்பாள் வெளியாகி 55 வருஷமாச்சு..!
சிவாஜியின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாள் படம் வெளியாகி இன்றோடு 55 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சிவாஜியின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாள் படம் வெளியாகி இன்றோடு 55 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வார இதழில் தொடராக எழுதிய கதை
ஆனந்த விகடனில் எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதை தான் ‘தில்லானா மோகானாம்பாள்’ படமாக வெளிவந்தது. நாதஸ்வர கலைஞனுக்கும், பரத கலையை உயிராக எண்ணும் பெண்ணுக்கும் இடையே நடக்கிற மோதல், காதல் தான் அடிப்படை கதை என்றாலும், திரைக்கதை மூலம் நம்மையே படம் நடக்கிற நிகழ்வுக்கெல்லாம் அழைத்துச் சென்றிருப்பார்கள்.
இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய இப்படத்தில் சிவாஜிகணேசன், பத்மினி, டி.எஸ்.பாலையா. ஏவிஎம் ராஜன், நாகேஷ், மனோரமா, தயாரிப்பாளர் கே.பாலாஜி, நம்பியார், கே. ஏ. தங்கவேலு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
மறக்க முடியாத படமாக இருக்க காரணம்
சிவாஜியின் நடிப்பை ரசிகர்களில் சிலர் ஓவர் ஆக்டிங் என சொல்வார்கள். ஆனால் சிக்கல் சண்முகசுந்தரம் என்ற கேரக்டரில் நாதஸ்வர கலைஞராக மிகச்சரியான நடிப்பை வழங்கினார். உண்மையிலேயே இவர் தான் நாதஸ்வரம் வாசிக்கிறாரோ என்ற சந்தேகம் சாதாரண ரசிகனுக்கும் எழும் வண்ணம், உணர்வுகளிலும், அந்த கலைஞர்களுக்கே நளினங்களிலும் நம்மை மெய் சிலிர்க்க வைத்திருப்பார்.
அவருக்கு கொஞ்சமும் சளைக்காதவராக நாட்டிய பேரோளியாக பத்மினி மின்னியிருப்பார். பரதநாட்டியத்திற்கு என நேர்ந்து விடப்பட்டவர் என ரசிகர்களால் அவர் கொண்டாடப்பட்டார். சிவாஜியின் தம்பியாக ஏவிஎம்.ராஜனும் ஒரு பக்கம் இயல்பாக நடிக்க, மறுபக்கம் மேளக்காரராக பாலையா காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார். ஜில்ஜில் ரமாமணியாக வரும் மனோரமாவுக்கு அந்த கேரக்டர் அவரது சினிமா கேரக்டரில் அடையாளமாக அமைந்தது. நாகேஷ், நம்பியார் தொடங்கி ஒவ்வொருவரும் நடிப்பில் போட்டி போட்டி நடித்திருந்தனர். கலைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களையும் அந்த காலக்கட்டத்திலேயே காட்சிப்படுத்தியிருப்பார்கள்
திரைக்கதை மேஜிக்
மோதல் காதலாகி வந்த பிறகு நடக்கின்ற ஒவ்வொரு நெகட்டிவ் சம்பவங்களுக்கான காட்சிகள் சிவாஜிக்குள் முளைக்கும் சந்தேகத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருப்பதும், அதனை ரசிகர்கள் வழியே கடத்துவதும் என திரைக்கதை மேஜிக் மிகப்பெரியது.
திகட்டாத பாடல்கள்
இந்த படத்தில் இடம் பெற்ற மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, நலந்தானா உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் இன்றும் ரசிக்கக்கூடிய அளவில் உள்ளது. இந்த படத்தின் ஈர்ப்பால் தான் பிற்காலத்தில் கரகாட்டக்காரன், அதனைத் தொடர்ந்து சங்கமம் ஆகிய கலைகளை மையப்படுத்திய படங்கள் வெளியானது.